பெண்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகள் என்பது காலங்காலமாக இருந்து வருகின்றது என்பதை நாம் வரலாறுகளின் மூலம் அறிகிறோம். அந்தக் கொடுமைகளின் உச்சக்கட்டமாக பெண் குழந்தைகளைப் பெற்றெடுப்பதையே கேவலமாகக் கருதி பிறந்த குழந்தைப் பெண்ணாகயிருப்பின் அதற்கு உயிருடனே சமாதிகட்டும் கொடுமைகள் நடந்திருக்கின்றது; ஏன் இன்றும் நடந்துக் கொண்டு தான் இருக்கின்றன. அதனால் தான் இன்றளவும் தொட்டில் குழந்தைகள் போன்ற திட்டம் போன்றவற்றை செயல்படுத்தி பெண் குழந்தைகள் காப்பகங்களை அரசாங்கமே நடத்த வேண்டிய இழி நிலைக்கு நாம் ஆளாகியிருக்கிறோம்.
அரசாங்கம் மற்றும் சமூக சேவகர்களால் நடத்தப்படும் குழந்தைகள் காப்பகம் பல இருந்தாலும் அவ்வப்போது ‘பச்சிளம் பெண் குழந்தை கிணற்றில் மிதந்தது’, ‘குப்பைத் தொட்டியில் கிடந்த பெண் சிசுவின் உடலை தெரு நாய்கள் குதறி தின்றன’ போன்ற செய்திகளை அன்றாடம் நாம் நாள் இதழ்களில் கான்கிறோம்.
இவைகள் அனைத்துதும், உலகம் எவ்வளவு தான் விஞ்ஞானத்தில் முன்னேறியிருந்தாலும் பெண்களுக்கான வன்கொடுமைகள் முற்றுப் பெறவில்லையென்பதையும் இன்னும் தொடர்ந்துக் கொண்டுதான் இருக்கின்றன என்பதையும் நமக்கு தெளிவாக உணர்த்துகிறது.
கல்வியறிவில்லாத கிரமத்திலிலுள்ள மூடர்கள் தான் பெண் குழந்தைகளைப் பளுவாகக் கருதி அவர்களை பிறந்த உடனேயே கொன்று விடுகின்றார்கள் எனில் பட்டணத்திலுள்ள படித்த மேதைகளோ அந்தப் பெண் சிசுக்கள் இந்த உலகைப் பார்ப்பதற்கு முன்னரே பெண் குழந்தை என்பதையறிந்து கருவிலேயே அதை கொலை செய்து விடுவதைப் பார்க்கிறோம். கருவிலேயே செய்யப்படும் கொலைக்கு புதிய பெயர் சூட்டி ‘கருக் கலைப்பு’ என்று என்று வேறு அழைக்கின்றனர்.
பெண் குழந்தைகளை அற்பமாகக் கருதி அதைக் கொலை செய்பவர்களை இஸ்லாம் மிக வன்மையாகக் கண்டிக்கின்றது. அறியாமைக் காலத்தில் வாழ்ந்த மக்கள் பெண் குழந்தைகள் பிறந்ததும் அதைக் கேவலமாகக் கருதி முகம் சுளித்தவர்களாக மக்களின் முகத்தில் கூடி விழிக்க திராணியற்றவர்களாக இருந்தனர்.மேலும் அந்தக் குழந்தைகளை கொன்றுவிடலாமா அல்லது இழிவுடன் இந்தக் குழந்தையை வளர்க்கலாமா என்றும் குழம்பி வந்தனர்.இதைக் கண்டிக்கும் விதமாக அகில உலக மனிதர்களுக்கும் சத்திய நேர்வழி காட்ட தன் இறுதி தீர்க்கதரிசி மூலம் இறைவன் அனுப்பிய திருவேதத்தில் கூறுகிறான்: –
“அவர்களில் ஒருவனுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது என்று நன்மாராயங் கூறப்பட்டால் அவன் முகம் கறுத்து விடுகிறது – அவன் கோபமுடையவனாகிறான். எதைக் கொண்டு நன்மாராயங் கூறப்பட்டானோ, (அதைத் தீயதாகக் கருதி) அந்தக் கெடுதிக்காக(த் தம்) சமூகத்தாரை விட்டும் ஒளிந்து கொள்கிறான் – அதை இழிவோடு வைத்துக் கொள்வதா? அல்லது அதை (உயிரோடு) மண்ணில் புதைத்து விடுவதா? (என்று குழம்புகிறான்); அவர்கள் (இவ்வாறெல்லாம்) தீர்மானிப்பது மிகவும் கெட்டதல்லவா?” (அல்-குர்ஆன் 16:58-59)
வேறு சில மூடர்களோ ஈவு இரக்கம் என்பது சிறிதுமின்றி பெண்ணாகப் பிறந்த ஒரே காரணத்துக்காக அந்தப் பச்சிளம் குழந்தையை துடிதுடிக்க உயிரோடு புதைத்து வந்தனர். நமதூர்களில் கள்ளிப்பால், அரளிவிதை, நெல் மணிகள் கொடுத்து பெண் குழந்தைகளைக் கொல்வது போல! இஸ்லாம் இவற்றை வன்மையாக கண்டிப்பதுடன், இவ்வாறு கொலை செய்யப்பட்ட அந்த பெண் சிசுக்கள், நியாயத் தீர்ப்பு நாளில் அவைகள் எதற்காக கொலை செய்யப்பட்டது என்று விசாரணை செய்யப்பட்டு கொலை செய்தவர்களுக்கு கடுமையான தண்டணையளிக்கப்படும் என்று கூறுகிறது.
நியாயத் தீர்ப்பு நாளின் ஒரே அதிபதியாகிய ஏக இறைவன் கூறுகிறான்: –
‘உயிருடன் புதைக்கப்பட்ட பெண் (குழந்தை) வினவப்படும் போது- எந்தக் குற்றத்திற்காக அது கொல்லப்பட்டது?’ என்று- (அல்-குர்ஆன் 81:8-9)
இன்னும் சிலர் எங்கே நிறைய குழந்தைகள் பெற்றால் அவர்களை வளர்த்து ஆளாக்குவதற்கு நிறைய செல்வம் தேவைப்படுமே! அதனால் நம் செல்வம் எல்லாம் தீர்ந்து நாம் ஏழையாகி விடுவோமே என்று வறுமைக்கு பயந்து ஓரிரு குழந்தைகளுக்கு மேல் கருவுற்றால் அதைக் கருகலைப்பு என்ற பெயரில் கருவில் வைத்தே கொலை செய்கின்றனர். ஆனால் இஸ்லாமோ இதையும் கண்டிப்பதுடன் உங்களுக்கும் உங்கள் குழந்தைகளுக்கும் இறைவனே உணவளிக்கிறான்! அதனால் வறுமைக்கு பயந்து உங்கள் குழந்தைகளை கொலை செய்யாதீர்கள் என்று ஆணையிடுகிறது.
‘நீங்கள் வறுமைக்குப் பயந்து உங்களுடைய குழந்தைகளைக் கொலை செய்யாதீர்கள்; அவர்களுக்கும் உங்களுக்கும் நாமே உணவை (வாழ்க்கை வசதிகளையும்) அளிக்கின்றோம் – அவர்களைக் கொல்லுதல் நிச்சயமாகப் பெரும் பிழையாகும்’ (அல்-குர்ஆன் 17:31)
‘வாருங்கள்! உங்கள் இறைவன் உங்கள் மீது விலக்கியிருப்பவற்றையும் (ஏவியிருப்பவற்றையும்) நான் ஓதிக் காண்பிக்கிறேன்; எப்பொருளையும் அவனுக்கு இணையாக வைக்காதீர்கள்; பெற்றோர்களுக்கு நன்மை செய்யுங்கள்; வறுமைக்குப் பயந்து ;உங்கள் குழந்தைகளைக் கொல்லாதீர்கள் – ஏனெனில் உங்களுக்கும், அவர்களுக்கும் நாமே உணவளிக்கின்றோம்; வெளிப்படையான இரகசியமான மானக்கேடான காரியங்களை நீங்கள் நெருங்காதீர்கள்; அல்லாஹ் தடுத்துள்ள எந்த ஓர் ஆத்மாவையும் நியாயமானதற்கு அல்லாமல் – கொலை செய்யாதீர்கள் – இவற்றை நீங்கள் உணர்ந்து கொள்வதற்காக (இறைவன்) உங்களுக்கு (இவ்வாறு) போதிக்கின்றான்’ (அல்-குர்ஆன் 6:151)
இஸ்லாம் ஒரு மதமல்ல! மாறாக அகில உலக மாந்தர்களுக்கும் ஏற்ற இறைவனால் அங்கீகரிக்கப்பட்ட ஓர் உன்னத வாழ்வியல் நெறிமுறையாகும். இது ஒரு மனிதன் பிறந்தது முதல் இறக்கும் வரையிலான அவனது அனைத்து வாழ்வியல் அம்சங்கங்களையும் உள்ளடக்கிய வாழ்க்கைத் தத்துவமாகும். இதை முறையாகப் பின்பற்றுபவர்கள் இத்தகைய சிசுக்கொலைகளை ஒருபோதும் செய்யமாட்டார்கள். இதைச் செய்பவர்கள் எல்லாம் இஸ்லாம் என்னும் அழகிய வாழ்க்கை முறையை விட்டுவிட்டு ஒரே இறைவனல்லாத பிற இணை தெய்வங்களை வணங்குபவர்களும் இஸ்லாம் என்னும் நேரிய வழிமுறையை விட்டும் தவறியவர்களும் தான் என்று இஸ்லாம் கூறுகிறது.
இறைவன் கூறுகிறான்: –
‘இவ்வாறே இணை வைப்போரில் பெரும்பாலோருக்கு, அவர்களுடைய குழந்தைகளையே கொலை செய்வதை அவர்களுடைய தெய்வங்கள் அழகாக்கி வைத்துள்ளன; அவர்களை நாசப்படுத்தி, அவர்களுடைய மார்க்கத்தையும் குழப்பத்திலாக்கிவிட்டன’ (அல்-குர்ஆன் 6:137)
‘எவர்கள் அறிவில்லாமல் மூடத்தனமாக தம் குழந்தைகளைக் கொலை செய்தார்களோ; இன்னும் தங்களுக்கு அல்லாஹ் உண்ண அனுமதித்திருந்ததை அல்லாஹ்வின் மீது பொய் கூறி (ஆகாதென்று) தடுத்துக் கொண்டார்களோ, அவர்கள் வழிகெட்டு விட்டனர், நேர்வழி பெற்றவர்களாக இல்லை’ (அல்-குர்ஆன் 6:140)
எனவே, என தருமை சகோதர, சகோதரிகளே! நாம் சிந்தித்து செயலபட்டு சிசுக்கொலைகள் எந்த வகையில் நடைபெற்றாலும் அவற்றைத் தடுத்து நிறுத்தப் பாடுபடுவோமாக! இறைவன் காட்டும் நேர்வழியில் நடந்திட முயற்சிப்போமாக!