கட்டுரை ஆசிரியர் : மஸ்தூக்கா
ரபீவுல் அவ்வல் மாதம் வந்து விட்டால், 12 நாட்களும் பள்ளிகள் தோறும் பக்திப் பரவசத்துடன் மவ்லிது ஓதப் படுகின்றது. பணக்காரர்கள் சிலர் பரக்கத்துக்காகத் தமது வீடுகளிலும் இந்த மவ்லிதை ஓதி விருந்து படைக்கின்றனர். தமது வயிற்றுப் பிழைப்புக்காக, சில கூலிப் பட்டாளங்கள் உருவாக்கிய இப்பழக்கம், இறைவனாலோ இறைத்தூதர் (ஸல்) அவர்களாலோ, அங்கீகரிக்கப் பட்தல்ல. இந்த மவ்லிதை நிராகரிப்பதற்கு இந்த ஒரு காரணம் மட்டுமே போதும்.
அண்ணல் நபி (ஸல்) அவர்கள் புகழ் பாடுவதாகச் சொல்பவர்களுக்கு, அந்த மவ்லிதின் அர்த்தம் தெரியாது. பொருள் தெரியாமல் இவர்கள் எப்படி புகழ் பாடுகிறார்கள்?
பெருமானார் (ஸல்) அவர்களின் புகழ் பாடுவது நன்மை தானே என்று சொல்பவர்களிடம், பணம் கொடுக்காமல் ஒவ்வொருவர் வீட்டிலும் வந்து புகழ் பாடிவிட்டுச் செல்லுங்கள் என்று சொல்லிப் பாருங்கள் காணாமல் போய் விடுவார்கள்.
வசதியுள்ள வீட்டுக்கு விடி மவ்லிது, ஏழை வீட்டுக்கு நடை மவ்லிது என்று தரம் பிரித்து தட்சணைக்குத் தகுந்தபடி வேகமும் ராகமும் வித்தியாசப் படும். இன்னும் இது போன்ற ஏகப்பட்ட திரு விளையாடல்களால் கேலிக் கூத்தாக்கப்பட்ட இந்த மவ்லிது சமாச்சாரம் இஸ்லாத்திற்கு முரணானது என்பதை உணர வேண்டும்.
நபி (ஸல்) அவர்களைப் புகழ்ந்து ஹஸ்ஸான் இப்னு தாபித் (ரலி) கஃபு இப்னு சுஹைர் (ரலி) போன்ற நபித் தோழர்கள் கவிதை பாடியிருப்பதாகச் சொல்வார்கள்.
ஆம் உண்மை தான். அண்ணல் நபி (ஸல்) அவர்களால் அங்கீகரிக்கப் பட்ட அந்தக் கவிதைகளையே எந்த நபித் தோழரும் புனிதம் என்றுக் கருதவில்லை! பள்ளிக்குப் பள்ளி பக்திப் பரவசத்துடன் ஓதிக் கொண்டிருக்கவில்லை! வீடுகளில் ஓதினால் பரக்கத் ஏற்படும் என்று நம்ப வில்லை! ராகம் போட்டு ரபீவுல் அவ்வல் மாதத்தில் வீடு வீடாகப் போய் பாடி, காசு வாங்கவில்லை! தமது செயல்களை நியாயப் படுத்த ஆதாரங்களை அள்ளி வீசுவோர் அவற்றின் மறு கோணத்தைப் பற்றிச் சிந்திப்பதில்லை.
கருத்துள்ள ஆக்ககங்கள் ஜஸாகுமுல்லாஹ் கைர்