பிறந்த குழந்தைக்கு 7 ஆம் நாள் ஆண் குழந்தையாக இருப்பின் இரண்டு ஆடுகளும் பெண் குழந்தையாக இருப்பின் ஒரு ஆடும் அறுத்து அகீகா கொடுக்க வேண்டும். இது நபிவழி. ஆனால் இந்த சுன்னத் (நபி வழி) புறக்கணிக்கப்பட்டு ஒரு பித்அத் உருவாகிவிட்டது.
குழந்தை பிறந்த 40 ஆம் நாள் அன்று தடபுடலாக விருந்து வைத்துப் ‘பெயர் சூட்டு விழா’ என்று ‘அசரத்தைக்’ கூப்பிட்டு பெயர் சூட்டப் படுகிறது. குழந்தை பிறந்தாலும் 40; திருமணத்திலும் 40; இறந்தவர் வீட்டிலும் 40! சித்த மருத்துவத்தில் மருந்து சாப்பிட ஏற்பட்ட இந்த ‘மண்டலக்’ கணக்கிற்கு மார்க்கத்தில் எந்த ஆதாரமும் இல்லை.
பெயர் சூட்டுவதற்கு ஒரு விழா வைத்து அசரத்தைக் கூப்பிட்டுத் தான் பெயர் வைக்க வேண்டும் என்பதில்லை. விருப்பமான பெயரைத் தேர்வு செய்து குழந்தைக்கு அதிக உரிமையுள்ள தாயோ தந்தையோ கூப்பிட வேண்டியது தான். இதற்கென்று எந்தச் சடங்கும் மார்க்கத்தில் இல்லை.
சிலர் வருடந்தோறும் குழந்தையின் பிறந்த நாளைக் கொண்டாடுகின்றனர். லீப் வருடத்தில் பிப்ரவரி 29 அன்று பிறந்த குழந்தைக்கு வருடந்தோறும் எப்படிக் கொண்டாடுவார்களோ? தெரியவில்லை. இன்னும் சிலர் அநாச்சாரத்தில் இன்னும் ஒரு படி மேலே சென்று குழந்தையின் வயதுக் கணக்குப்படி மெழுகுவர்த்தி ஏற்றி, கேக் வெட்டி ‘ஹேப்பி பர்த் டே’ கொண்டாடுகின்றனர். இது முழுக்க முழுக்க ஓர் அந்நியக் கலாச்சாரம். இதற்கு இஸ்லாமிய மார்க்கத்தில் அனுமதி இல்லை.
‘யார் அந்நிய கலாச்சாரத்தை பின்பற்றுகிறார்களோ அவர்கள் நம்மைச் சேர்ந்தவர்கள் அல்ல’ என்பது நபி மொழி.
இஸ்லாமியப் பெற்றோருக்குப் பிறந்த குழந்தையைச் சிறு வயது முதலே இஸ்லாமியக் கலாச்சாரத்தின் படி வளர்க்க வேண்டும். குர்ஆன் ஓதக் கற்றுக் கொடுக்க வேண்டும். ஐவேளையும் தொழப் பழக்க வேண்டும். முழுக்க முழுக்க முஸ்லிம் குழந்தையாகப் பழக்கவும் வளர்க்கவும் வேண்டும்.