அனைத்துப் புகழும் அகிலங்கள் அனைத்தையும் படைத்து இரட்ச்சித்து வருபவனான அல்லாஹ்வுக்கே உரித்தானது. அவனிடமே நாம் உதவி தேடுகிறோம்; அவனிடமே நாம் மன்னிப்பு கோருகிறோம்; அல்லாஹ் யாருக்கு நேர்வழி காட்டுகிறானோ அவரை யாராலும் வழி தவறச் செய்ய இயலாது; மேலும் யாரை அவன் வழி தவறச்செய்கிறானோ அவருக்கு நேர்வழி காட்டுபவர் யாருமில்லை.
வணக்கத்திற்கு உரியவன் அல்லாஹ்வுத்தஆலாவைத் தவிர வேறு யாருமில்லை என்று நான் சாட்சி கூறுகிறேன்; மேலும் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ்தஆலாவின் உண்மை அடியாரும் இறுதி தூதரும் ஆவார்கள் எனவும் சாட்சி கூறுகிறேன். அல்லாஹ்வின் சாந்தியும் சமாதானமும் நபிகள் நாயம் (ஸல்) அவர்களின் மீதும், அவர்களின் குடும்பத்தார்கள், தோழர்கள் மீதும், நம் மீதும் மற்றும் கியாம நாள் வரை அல்லாஹ்வின் தூதரைப் பின்பற்றக் கூடிய முஸ்லிம்கள் அனைவரின் மீதும் உண்டாவதாக. ஆமீன்.
அன்பான சகோதர சகோதரிகளே, அல்லாஹ் தன் திருமறையில் கூறுகின்றான்: –
‘நிச்சயமாக அல்லாஹ் தனக்கு இணைவைப்பதை மன்னிக்கவேமாட்டான்; இது அல்லாத (பாவத்)தைத்தான் நாடியவருக்கு மன்னிப்பான்; எவன் ஒருவன் அல்லாஹ்வுக்கு இணை வைக்கின்றானோ, அவன் நிச்சயமாக வெகு தூரமான வழிகேட்டில் ஆகிவிட்டான்’ (அல்குர்ஆன் 4:116)
இந்த வசனத்தில் அல்லாஹ் தனக்கு இணைவைப்பதை மன்னிக்கவே மாட்டான் என்று கூறியிருப்பதை சற்று கவனத்துடன் ஆராயவேண்டும். ஏனென்றால் இறைவனின் மன்னிப்பே கிடைக்காத இணைவைப்பது என்றால் என்ன என்பதை நாம் அறிந்து கொண்டு அவற்றிலிருந்து முற்றிலுமாக தவிர்ந்து இருக்க வேண்டியது மிக மிக அவசியமாகிறது.
இணைவைக்கும் ஒருவருக்கு அல்லாஹ்வின் மன்னிப்பு கிடைக்காததோடு மட்டுமில்லாமல் அவர் தம்முடைய வாழ்நாளில் செய்த அனைத்து நல்லறங்களும் அழிந்து நிரந்தர நரகத்திற்கு வழிவகுக்கும்.
1) இணைவைத்தலின் தீமைகள்: –
- ஒருவர் தம் வாழ்நாளில் செய்த அனைத்து நல்லறங்களும் பாழாகிவிடும்
- இறைவன் இணைவைத்தலைத் தவிர ஏனைய பாவங்களைத் தான் நாடியோருக்கு மன்னிப்பான்
- இணை வைத்தவனின் கதி மிகவும் மோசமானது
- இறைவனுக்கு இணை கற்பித்தால் நிரந்தர நரகம்.
நல்லமல்களை அழித்துவிடும் ஷிர்க்: –
அல்லாஹ் கூறுகிறான்: –
இதுவே அல்லாஹ்வின் நேர் வழியாகும், தன் அடியார்களில் அவன் யாரை விரும்புகிறானோ, அவர்களுக்கு இதன்மூலம் நேர்வழி காட்டுகிறான்; (பின்னர்) அவர்கள் இணைவைப்பார்களானால், அவர்கள் செய்து வந்ததெல்லாம், அவர்களை விட்டு அழிந்துவிடும். (அல்குர்ஆன் 6:88)
அன்றியும், உமக்கும், உமக்கு முன் இருந்தவர்களுக்கும், வஹீ மூலம் நிச்சயமாக அறிவிக்கப்பட்டது என்னவென்றால், ‘நீவிர் (இறைவனுக்கு) இணை வைத்தால், உம் நன்மைகள் (யாவும்) அழிந்து, நஷ்டமடைபவர்களாகி விடுவீர்கள்’ (என்பதுவேயாகும்). ஆகவே, நீர் அல்லாஹ்வையே வணங்குவீராக! மேலும், அவனுக்கு நன்றி செலுத்துபவர்களில் நின்றும் இருப்பீராக! (அல்குர்ஆன் 39:65 & 66)
இணைவைத்தலைத் தவிர ஏனைய பாவங்களைத் தான் நாடியோருக்கு மன்னிப்பான்: –
அல்லாஹ் கூறுகிறான்: –
நிச்சயமாக அல்லாஹ் தனக்கு இணைவைப்பதை மன்னிக்கமாட்டான்; இதைத்தவிர, (மற்ற) எதையும் தான் நாடியவர்களுக்கு மன்னிப்பான்; யார் அல்லாஹ்வுக்கு இணைவைக்கிறார்களோ அவர்கள் நிச்சயமாக மிகவும் பெரிய பாவத்தையே கற்பனை செய்கின்றார்கள். (அல்குர்ஆன் 4:48 )
இணை வைத்தவனின் கதி: –
அல்லாஹ்வுக்கு எதையும் இணைவைக்காது அவனுக்கு முற்றிலும் வழிப்பட்டவர்களாக இருங்கள்; இன்னும் எவன் அல்லாஹ்வுக்கு இணை வைக்கிறானோ, அவன் வானத்திலிருந்து விழுந்து பறவைகள் அவனை வாரி எடுத்துச் சென்றது போலும் அல்லது பெருங் காற்றடித்து, அவனை வெகு தொலைவிலுள்ள ஓரிடத்திற்கு அடித்துக் கொண்டு சென்றது போலும் ஆகிவிடுவான். (அல்குர்ஆன் 22:31)
இறைவனுக்கு இணை கற்பித்தால் நிரந்தர நரகம்.
அல்லாஹ் கூறுகிறான்: –
“…எவனொருவன் அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்பானோ அவனுக்கு அல்லாஹ் சுவனபதியை நிச்சயமாக ஹராமாக்கிவிட்டான், மேலும் அவன் ஒதுங்குமிடம் நரகமேயாகும், அக்கிரமக்காரர்களுக்கு உதவிபுரிபவர் எவருமில்லை.” (அல்குர்ஆன் 5:72 )
இந்த அளவிற்கு படுபயங்கரமான இணைவைத்தல் என்பது பற்றி நாம் முழுவதுமாக அறிந்திருக்க வில்லையானால் அவற்றிலிருந்நு பரிபூரணமாக தவிர்திருப்பது என்பது இயலாத காரியம். எனவே ஷிர்க் என்றால் என்ன? அதன் வகைகள் யாவை என்பவை பற்றி இந்த சிறிய ஆய்வுக் கட்டுரையில் ஆராய்வோம்.
இன்று நமது சமுதாயத்தில் இணைவைப்பது (ஷிர்க்) என்றால் என்ன? என்று கேட்டால் மிக எளிதாக கிடைக்கும் பதில் ‘சிலைகளை வணங்குவது’ என்றே நம்மில் பெரும்பாலோர் கூறுவர். இவ்வாறு இவர்கள் கூறுவதற்கு காரணம் இணை வைப்பது என்றால் என்ன என்பதைப் பற்றிய அறியாமையே ஆகும்.
2) ஷிர்க் என்றால் என்ன?
ஷிர்க் என்பது தவ்ஹீத் (அல்லாஹ்வை ஒருமைப்படுத்துதல்) என்பதற்கு நேர்மாற்றமான அல்லாஹ்வுக்கு இணை கற்பித்தலாகும்.
அதாவது ‘ஷிர்க்’ என்பது,
- அல்லாஹ்வுக்கு மட்டுமே செய்ய வேண்டிய வணக்க வழிபாடுகளை அல்லாஹ் அல்லாத பிறருக்கு செய்வது
- அல்லாஹ்வுக்கு மட்டுமே இருக்கக் கூடிய ஆற்றல்களில் சிலவற்றை அல்லாஹ் அல்லாத பிறருக்கும் இருப்பதாக கருதுவது
ஆகியவையாகும்.
ஷிர்கின் வகைகள்: –
ஷிர்கில் மூன்று வகைகள் உள்ளன. அவைகளாவன: –
- பெரிய ஷிர்க்
- சிறிய ஷிர்க்
- மறைமுக ஷிர்க்
பெரிய ஷிர்க் என்றால் என்ன?
அல்லாஹ்வுக்கு மட்டுமே செய்யப்படவேண்டிய வணக்க வழிபாடுகளை அல்லாஹ் அல்லாதவைகளுக்கு செய்வது பெரிய ஷிர்க் ஆகும்.
சிறிய ஷிர்க் என்றால் என்ன?
அல்லாஹ்வுக்காக செய்யவேண்டும் என்ற நோக்கமில்லாமல் பிறர் பார்த்து பாராட்ட வேண்டும் என்று கருதி வணங்குவது அல்லது
பிறர் தம்மை தவறாக நினைத்து விடக் கூடாது என்பதற்காகவோ அல்லாஹ்வை வணங்குவது
இவ்வாறு வணக்கம் புரிவது சிறிய ஷிர்க் ஆகும்.
நபி (ஸல்) அவர்கள் சிறிய ஷிர்க் குறித்து மக்களை எச்சரித்துள்ளார்கள்.
மறைவான ஷிர்க் என்றால் என்ன?
மறைவான ஷிர்க் என்பது அல்லாஹ் நம்மீது விதித்துள்ள கட்டளைகளை ஏற்று அதன் மீது திருப்தி கொண்டு அதன்படி செயல்படாமல் அவற்றை அலட்சியம் செய்வதாகும்.
3) ஷிர்குல் அக்பர் ஒரு விளக்கம்: –
இந்த சிறிய ஆய்வுக்கட்டுரையில் ஷிர்குல் அக்பர் என்று சொல்லப்படக்கூடிய மாபெரும் இணைவைத்தல் பற்றி குர்ஆன் மற்றும் ஹதீஸ்களின் அடிப்படையில் ஆராய்வோம்.
ஷிர்குல் அக்பர் என்பது அல்லாஹ்வுக்கு மட்டுமே செய்யப்படவேண்டிய வணக்க வழிபாடுகளை அல்லாஹ்வுக்கு அல்லாதவர்களுக்கு செய்வதும், அல்லாஹ்வுடைய பண்புகளை ஆற்றல்களை பிறருக்கு இருப்பதாக கருதுவதும் என பார்த்தோம்.
நம்முடைய சமுதாயத்தில் உள்ளவர்களில் பலர் இஸ்லாத்தின் மூல மந்திரமான ‘லாயிலாஹ இல்லல்லாஹ்’ என்பதன் பொருள் அறியாமல் தான் இந்த ‘ஷிர்க்’ என்ற கொடிய பாவத்தில் சிக்கி உழல்கின்றனர்.
வணக்கம் என்றால் என்ன? என்று கேட்டால் அவர்கள் கூறுவது தொழுகை, நோன்பு, ஜக்காத் மற்றும் ஹஜ் என்பார்கள். ‘வணக்கம்’ என்பது இவைகள் மட்டுமன்று. அல்லாஹ்வும் அவனது தூதரும் (ஸல்) எவைகளையெல்லாம் அல்லாஹ்வுக்கு மாத்திரம் செய்ய வேண்டுமென்று கட்டளையிட்டு இருக்கிறார்களோ அவைகள் அனைத்தும் வணக்கமாகும். அவற்றை அல்லாஹ்வை விடுத்து மற்றவருக்கு செய்தால் அவைகளும் ஷிர்கின் வகையைச் சேர்ந்ததாகும்.
உதாரணமாக பின்வரும் அனைத்தும் வணக்கத்தின் வகைகளாகும். அவைகளை அல்லாஹ்வுக்கு மட்டுமே நாம் செய்ய வேண்டும்.
- துஆ (பிரார்த்தனை) செய்தல்
- ருகூவு / சஜ்தா செய்தல்
- அழைத்து உதவி தேடுதல்
- பாதுகாவல் தேடுதல்
- நேர்ச்சை செய்தல்
- தவாபு செய்தல்
- சத்தியம் செய்தல்
- குர்பானி கொடுத்தல்
- ஆதரவு / தவக்குல் வைத்தல்
- அல்லாஹ்வைப் போல் பிறரை நேசித்தல்
ஒருவர் மேற்கண்ட அனைத்து செயல்களுமே வணக்கத்தின் வகைகள் என்று அறிந்துக் கொள்வாராயின் இன்ஷா அல்லாஹ் அவர் இந்த வணக்க முறைகளை அல்லாஹ் அல்லாதவர்களுக்கு செய்வதிலிருந்தும் தவிர்ந்துக் கொள்வார். ஆனால் இவைகளும் வணக்கமே என்று புரிந்துக் கொள்வதில் தான் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து விடுகின்றனர்.
மேலும் ஒருவர் அல்லாஹ்வுக்கு மட்டுமே இருக்கக்கூடிய பண்புகள் மற்றும் ஆற்றல்கள் யாவை என அறிந்துக் கொள்வராயின் அவற்றில் இணை வைப்பதிலிருந்தும் தவிர்ந்துக் கொள்வார் இன்ஷா அல்லாஹ்.
இந்த சிறிய ஆய்வுக் கட்டுரையில் ஒரு சில உதாரணங்களின் மூலம் எவ்வாறெல்லாம் மக்கள் அல்லாஹ்வுக்கு அறிந்தோ அல்லது அறியாமையினாலோ இணை கற்பிக்கின்றார்கள் என்பதைப் பார்ப்போம்.
உதாரணம்: –
ஒருவர் சிங்கப்பூரிலிருந்து கொண்டு அல்லது உலகின் வேறு எந்த மூலையில் இருந்துக் கொண்டோ நாகூரில் அடக்கமாகியிருப்பதாக் கூறப்படும் ஷாகுல் ஹமீது வலியுல்லாஹ்விடம் யா ஷாகுல் ஹமீது பாதுஷாவே என்னுடைய இன்ன தேவையை நீங்கள் நிறைவேற்றித் தந்தால் நான் தங்களின் இடத்திற்கு வருகை தந்து தங்களுக்கு காணிக்கை செலுத்துகிறேன் என நேர்ச்சை செய்வதாக வைத்துக் கொள்வோம்.
இந்த இடத்தில் நாம் இவருடைய வேண்டுதலை ஆய்வு செய்தோமேயானால் இவர் பல வகைகளில் அல்லாஹ்வுக்கு இணை கற்பித்தவராகிறார். அவைகளாளாவன: –
1) வணக்க வழிபாடுகளில் இணை வைப்பது: –
அல்லாஹ்விடம் மாத்திரமே செய்ய வேண்டிய பிரார்த்தனையை , துஆவை ஷாகுல் ஹமீது அவுலியாவிடம் செய்தல்
அல்லாஹ்வுக்கு மாத்திரமே செய்ய வேண்டிய நேர்ச்சையை ஷாகுல் ஹமீது அவுலியாவுக்கு செய்தல்
2) அல்லாஹ்வுடைய பண்புகளில், ஆற்றல்களில் இணை வைப்பது: –
அல்லாஹ்வுக்கு மட்டுமே இருக்கக் கூடிய பண்புகளாகிய எங்கிருந்துக் கொண்டு கேட்டாலும் கேட்கும் சக்தி உடையவன் (அஸ் ஸமீவுன்) மற்றும் ஒரே நேரத்தில் அனைத்தையும் பார்ப்பவன் (பஷீரன்) என்ற பண்புகள், ஆற்றல்கள் ஷாகுல் ஹமீது பாதுஷாவுக்கும் இருப்பதாகக் கருதுவது
அல்லாஹ்வுக்கு மட்டுமே இருக்கக் கூடிய பண்பாகிய ஒருவரின் இதயத்தில் உள்ள இரகசியத்தை அறியும் சக்தி உடையவன் என்ற பண்பை, ஆற்றலை ஷாகுல் ஹமீது பாதுஷாவுக்கும் இருப்பதாகக் கருதி அவரும் மனிதர்களின் இதயங்களிலுள்ளவற்றையெல்லாம் அறிகிறார் என நம்புவது
அல்லாஹ்வுக்கு மட்டுமே இருக்கக் கூடிய பண்பாகிய பிரார்த்தனையை செவிமெடுத்து அதை நிறைவேற்றித் தரும் ஆற்றல் ஷாகுல் ஹமீது அவுலியாவுக்கும் இருப்பதாக கருதுவது.
சகோதர, சகோதரிகளே இங்கு நாம் கவனமாக சிந்திக்க வேண்டும். ஏனெனில் அறிந்தோ அல்லது அறியாமலோ சர்வ சாதாரணமாக நம்மில் சிலர் செய்கின்ற இந்த வேண்டுதலில் இத்தனை வகையான ஷிர்க் நிறைந்துள்ளது. ஒருவர் மேற்கண்ட உதாரணத்தில் உள்ள பிரார்த்தனை (துஆ) செய்தல் மற்றும் நேர்ச்சை செய்தல் போன்ற வணக்கங்கள் அல்லாஹ்வுக்கு மட்டுமே செய்யப்பட வேண்டியவை என்றும், மேற்கண்ட உதாரணத்தில் கூறப்பட்ட பண்புகள் அல்லாஹ்வுக்கு மற்றுமே உரித்தானது என்றும் உணர்ந்துக் கொண்டால் அவர் இன்ஷா அல்லாஹ் இத்தகைய இணை வைத்தல்களிலிருந்து தவிர்ந்துக் கொள்வார். இவற்றை குர்ஆன் மற்றும் ஹதீஸ்களின் ஒளியில் ஆராய்வோம்.
துஆ (பிரார்த்தனை) செய்வதும் ஒரு வணக்கமே!: –
அல்லாஹ் கூறுகிறான்: –
(நபியே!) என் அடியார்கள் என்னைப்பற்றி உம்மிடம் கேட்டால்; ‘நிச்சயமாக நான் சமீபமாகவே இருக்கிறேன், பிரார்த்தனை செய்பவரின் பிரார்த்தனைக்கு அவர் பிரார்த்தித்தால் விடையளிக்கிறேன்; அவர்கள் என்னிடமே (பிரார்த்தித்துக்) கேட்கட்டும்; என்னையே நம்பட்டும். அப்பொழுது அவர்கள் நேர்வழியை அடைவார்கள்’ என்று கூறுவீராக (அல் குர்ஆன் 2:186)
உங்கள் இறைவன் கூறுகிறான்: ‘என்னையே நீங்கள் பிரார்த்தியுங்கள்; நான் உங்(கள் பிரார்த்தனை)களுக்கு பதிலளிக்கிறேன்; எவர்கள் என்னை வணங்குவதை விட்டும் பெருமையடித்துக் கொண்டிருக்கிறார்களோ, அவர்கள் சிறுமையடைந்தவர்களாக நரகத்தில் நுழைவார்கள். (அல் குர்ஆன் 40:60)
மேலும் அல் குர்ஆனின் வசனங்கள் 2:286, 7:55, 18:28, 35:14, 72:18 அனைத்தும் அல்லாஹ்விடமே பிரார்த்தனை செய்ய வேண்டும் என வலியுறுத்துகிறது.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: –
பிரார்த்தனை (துஆ) ஓர் வணக்கமாகும். என்னை அழையுங்கள். நான் உங்களுக்குப் பதிலளிக்கிறேன் என்று உங்கள் இறைவன் கூறுகிறான். (அறிவிப்பவர் : நுஃமான் பின் பஷீர் -ரலி, நூல்:அபூதாவூத், திர்மிதி)
மேற்கண்ட வசனங்கள் மற்றும் நபி மொழியில் இருந்து நாம் பெறும் தெளிவுகள் யாவை எனில்: –
- துஆ ஒரு வணக்கமாகும்.
- அல்லாஹ் சமீபமாக இருக்கிறான்.
- பிரார்த்தனைக்கு விடையளிக்கிறான்.
- அல்லாஹ்விடமே பிரார்த்திக்க (துஆ) செய்ய வேண்டும்
எனவே மேற்கண்ட குர்ஆன் மற்றும் ஹதீஸ் அடிப்படையில் நமது தேவைகளை அல்லாஹ்விடமே பிரார்த்திக்க வேண்டும். ஷாகுல் ஹமீது அவுலியாவிடமோ அல்லது வேறு எந்த வலியிடமோ, நபியிடமோ பிரார்த்தித்தால் அது ஷிர்க் எனப்படும் மன்னிக்கபடாத மாபெரும் பாவமாகும்.
நேர்ச்சை செய்வதும் ஒரு வணக்கமேயாகும்: –
நேர்ச்சை செய்வது ஒரு வணக்கம் என்பதற்கு பின்வரும் குர்ஆன் வசனங்கள் சான்றுகளாகும்.
அல்லாஹ் கூறுகிறான்: –
இன்னும், செலவு வகையிலிருந்து நீங்கள் என்ன செலவு செய்தாலும், அல்லது நேர்ச்சைகளில் எந்த நேர்ச்சை செய்தாலும் நிச்சயமாக அல்லாஹ் அதனை நன்கறிவான்; அன்றியும் அக்கிரமக்காரர்களுக்கு உதவி செய்வோர் எவரும் இலர். (அல் குர்ஆன் 2:270)
அவர்கள் தாம் (தங்கள்) நேர்ச்சைகளை நிறை வேற்றி வந்தார்கள்; (கியாம) நாளை அவர்கள் அஞ்சி வந்தார்கள். அதன் தீங்கு (எங்கும்) பரவியிருக்கும். (அல் குர்ஆன் 76:7)
எனவே மேற்கண்ட வசனங்களின் அடிப்படையில் நேர்ச்சை என்பதுவும் ஒரு வணக்கமே. அதை அல்லஹ்வுக்கு மாத்திரமே செய்ய வேண்டும். அதைவிடுத்து ஷாகுல் ஹமீது அவுலியா மற்றும் இன்னும் பிற அவுலியாவுக்குச் செய்தோமேயானால் அது ஷிர்க் என்னும் இணை வைத்தலைச் சேரும்.
எங்கிருந்துக் கொண்டு கேட்டாலும் கேட்கும் சக்தி உடையவன் அல்லாஹ் மட்டுமே: –
ஒரே நேரத்தில் அனைத்தையும் பார்ப்பவன் அல்லாஹ் மட்டுமே: –
திருக்குர்ஆனில் அல்லாஹ் தன்னுடைய பண்புகளில் ஒன்றாக அஸ் ஸமீவுன் என கூறுகிறான். இதற்கு ஒருவர் எங்கிருந்துக் கொண்டு கேட்டாலும், எத்தகையை சூழலில் இருந்துக் கொண்டு கேட்டாலும் கேட்கும் வல்லமை, ஆற்றல் பெற்றவன் என பொருள்படும். மேலும் ஒரே நேரத்தில் பல கோடி நபர்கள் அழைத்தாலும் அவர்களின் அழைப்பையும் கேட்கக் கூடியவன் எனவும் பொருள்படும். இந்த பண்பு, ஆற்றல் அல்லாஹ்வைத்தவிர வேறு யாரிடமும் இல்லை.
மேலும் திருக்குர்ஆனில் அல்லாஹ் தன்னுடைய பண்புகளில் ஒன்றாக ‘பஷீரன்’ என கூறுகிறான். இதற்கு அல்லாஹ் அனைத்தையும் ஒரே நேரத்தில் பார்க்கக் கூடியவன் என பொருள்படும். அதாவது ஒருவர் எங்கிருந்துக் கொண்டும் மேலும் எத்தகைய சூழலில் இருந்துக் கொண்டும் அழைத்தாலும் அவரைப் பார்க்கக் கூடியவன் அல்லாஹ் ஒருவன் மட்டுமே. அதுமட்டுமல்லாமல் அவன் அவனுடைய படைப்பினங்கள் அனைத்தையும் ஒரே நேரத்தில் பார்க்கக் கூடிய ஆற்றல் உள்ளவனாகவும் இருக்கிறான். இந்த ஆற்றல் அல்லாஹ்வைத்தவிர வேறு யாருக்கும் இல்லை.
யாராவது ஒருவர் தாம் சிங்கப்பூரிலிருந்து ஷாகுல் ஹமீது வலியுல்லாஹ்வை அழைக்கும் போதும், அதே நேரத்தில் உலகில் வேறு எந்த இடத்திலிருந்துக் கொண்டும் அழைக்கக் கூடிய பல்லாயிரக்கணக்காணோர்களைப் பார்த்து அவர்களின் அழைப்பைச் செவிமெடுக்கிறார் என நம்புவது அல்லாஹ்வுக்கு மட்டுமே இருக்கக் கூடிய ‘அஸ் ஸமீவுன்’ மற்றும் ப’ஷீரன்’ என்ற நாமங்களை, பண்புகளை இறைவனல்லாத ஷாகுல் ஹமீது அவுலியாக்கு இணை கற்பிப்பது போலாகும்.
அவர் அல்லாஹ்வுக்கு மட்டுமே இருக்கக் கூடிய எல்லாவற்றையும் ஒரே நேரத்தில் கேட்கும் தன்மையையும் (அஸ் ஸமீவுன்) மற்றும் எல்லாவற்றையும் ஒரே நேரத்தில் பார்க்கக்கூடியவன் (பஷீரன்) என்ற தன்மையையும் அல்லாஹ்வுக்கு மட்டுமல்லாமல் ஷாகுல் ஹமீது அவுலியாவுக்கும் இருப்பதாக எண்ணி அல்லாஹ்வின் அந்தப் பண்புகளில், ஆற்றல்களில் இணை வைத்தவராவார்.
அல்லாஹ் கூறுகிறான்: –
எவரேனும் இவ்வுலகின் பலனை(மட்டும்) அடைய விரும்பினால், “அல்லாஹ்விடம் இவ்வுலகப்பலனும், மறுவுலகப்பலனும் உள்ளன. அல்லாஹ் கேட்பவனாகவும் பார்ப்பவனாகவும் இருக்கின்றான்.” (அல் குர்ஆன் 4:134)
இதய இரகசியங்களை அறிபவன் அல்லாஹ்வே: –
அல்லாஹ் தன் திருமறையில் கூறுகிறான்: –
மேலும், உங்கள் சொல்லை நீங்கள் இரகசியமாக்குங்கள், அல்லது அதை பகிரங்கமாக்குங்கள் – நிச்சயமாக அவன் இதயங்களிலுள்ளவற்றையும் மிக அறிந்தவன் (அல்குர்ஆன் 67:13)
நம் மனதில் உள்ள நம்முடைய தேவைகளை அல்லது எண்ணங்களை நாம் வெளியே சொன்னால் தவிர மற்றவர்களால் அறிந்து கொள்ள இயலாது என்பது அனைவரும் அறிந்த விஷயம். ஆனால் நம்மைப் படைத்த ரப்புல் ஆலமீன் அல்லாஹ் மட்டும் நாம் மனதிற்குள் நினைப்பதையும் வெளிப்படையாகப் பேசுவதையும் அறிகிறான்.
அல்லாஹ் கூறுகிறான்: –
அன்றியும், அல்லாஹ் நீங்கள் மறைத்து வைத்திருப்பதையும், நீங்கள் பகிரங்கப்படுத்துவதையும் அறிகிறான். (அல் குர்ஆன் 16:19)
வெளிப்படையாக (நீங்கள் பேசும்) பேச்சையும் அவன் நிச்சயமாக அறிகிறான்; நீங்கள் (இதயத்தில்) மறைத்து வைப்பதையும் அவன் (நிச்சயமாக) அறிகிறான் (அல் குர்ஆன் 21:110)
மேற்கண்ட வசனங்களின் அடிப்படையில்,
- உள்ளங்களில் மறைத்து வைப்பதை அறிபவனும்,
- இதயங்களிலுள்ள இரகசியத்தை அறிபவனும்,
- மனிதர்களின் மனதில் உள்ள தேவைகளை அறிபவனும்
‘அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை’ என்பது உறுதியாகிறது. ஆனால் ஒருவர், ‘இந்தப் பண்புகள், ஆற்றல்கள் ஷாகுல் ஹமீது அவுலியாவிற்கும் உண்டு; அதனால் அவர் சிங்ப்பூரிலிந்து கேட்கும் அவரது தேவைகளை அல்லது அவருடைய மனதில் எண்ணியிருக்கும் நாட்டங்களை ஷாகுல் ஹமீது அவுலியா நிறைவேற்றித் தருகிறார்’ என நம்பிக்கை கொண்டு அதன்படி செயல்படுவாராயின் நிச்சயமாக அவர், ‘அல்லாஹ் தனக்கு மட்டுமே இருக்கக் கூடியதாக கூறும் அந்தப் பண்புகளை, ஆற்றல்களை, ஷாகுல் ஹமீது அவுலியாவுக்கும் பங்கிடுவதன் மூலம் அல்லாஹ்வுக்கு இணை வைத்தவராக கருதப்படுவார்’. (அல்லாஹ் நம்மைக் காப்பானாகவும்)
இவ்வாறு அல்லாஹ் அல்லாதவர்களை அழைப்பவர்களைப் பார்த்து அல்லாஹ் கூறுகிறான்: –
நிச்சயமாக அல்லாஹ்வையன்றி அவர்கள் எதை (நாயனென) அழைக்கிறார்களோ, அதை அவன் அறிகிறான் – இன்னும் அவன் (யாவரையும்) மிகைத்தவன்; ஞானம் மிக்கவன். (அல் குர்ஆன் 29:42)
மேலும், இதய இரகசியங்களை அறிந்தவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் இல்லை என்று பல வசனங்கள் கூறுகின்றன. இது பற்றிய விளக்கத்தை ‘இதய இரகசியத்தை அறிபவன் அல்லாஹ்வே’ என்ற தலைப்பில் பார்க்கவும்.
பிரார்த்தனைக்கு பதிலளிப்பவன் அல்லாஹ் மட்டுமே: –
நாம் எங்கிருந்துக் கொண்டு துஆ (பிரார்த்தனை) கேட்டாலும், எத்தகைய சூழ்நிலைகளில் இருந்துக் கொண்டு அழைத்தாலும் நம்முடைய அழைப்பச் செவியேற்று அதற்கு பதிலளிப்பவன், அந்த தேவைகளை நிறைவேற்றுபவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை.
அல்லாஹ் கூறுகிறான்: –
உங்கள் இறைவன் கூறுகிறான்: ‘என்னையே நீங்கள் பிரார்த்தியுங்கள்; நான் உங்(கள் பிரார்த்தனை)களுக்கு பதிலளிக்கிறேன்; எவர்கள் என்னை வணங்குவதை விட்டும் பெருமையடித்துக் கொண்டிருக்கிறார்களோ, அவர்கள் சிறுமையடைந்தவர்களாக நரகத்தில் நுழைவார்கள்.’ (அல் குர்ஆன் 40:60)
(நபியே!) என் அடியார்கள் என்னைப்பற்றி உம்மிடம் கேட்டால்; ‘நிச்சயமாக நான் சமீபமாகவே இருக்கிறேன், பிரார்த்தனை செய்பவரின் பிரார்த்தனைக்கு அவர் பிரார்த்தித்தால் விடையளிக்கிறேன்; அவர்கள் என்னிடமே(பிரார்த்தித்துக்) கேட்கட்டும்; என்னையே நம்பட்டும். அப்பொழுது அவர்கள் நேர்வழியை அடைவார்கள்’ என்று கூறுவீராக. (அல் குர்ஆன் 2:186)
‘உங்கள் இணை (தெய்வங்)களை அழையுங்கள்’ என்று (அவர்களுக்குச்) சொல்லப்படும். அவர்களை இவர்கள் அழைப்பார்கள்; ஆனால் அவர்கள் இவர்களுக்கு பதிலளிக்கமாட்டார்கள்; மேலும், அவர்கள் வேதனையைக் காண்பார்கள். அவர்கள் நேர்வழியில் சென்றிருந்தால் (இந்நிலைக்கு ஆளாகியிருக்க மாட்டார்கள்). (அல் குர்ஆன் 28:64)
நீங்கள் அவர்களைப் பிரார்த்தி(த்து அழை)த்தாலும், அவர்கள் உங்கள் பிரார்த்தனையை (அழைப்பை)ச் செவியோற்கார்; செவியேற்றாலும் கூட உங்களுக்கு பதில் அளிக்கமாட்டார்கள்; கியாம நாளில் நீங்கள் இணைவைத்ததையும் அவர்கள் நிராகரித்து விடுவார்கள்; யாவற்றையும் நன்கு அறிபவனைப் போன்று (அவர்கள்) எவருமே உங்களுக்கு அறிவிக்க மாட்டார்கள். (அல் குர்ஆன் 35:14)
உண்மையான அழைப்பு (பிரார்த்தனை) அவனுக்கே உரியதாகும்; எவர் அவனை அன்றி (மற்றவர்களை) அழைக்கின்றார்களோ, அவர்கள் இவர்களுக்கு எவ்வித பதிலும் தர மாட்டார்கள்; (அல்லாஹ் அல்லாதவர்களைப் பிரார்த்திப் போரின் உதாரணம்;) தண்ணீர் தன் வாய்க்கு(த் தானாக) வந்தடைய வேண்டுமென்று, தன் இருகைகளையும் விரித்து ஏந்திக் கொண்டு இருப்பவனைப்போல் இருக்கிறது; (இவன் அள்ளாது) அது வாயை அடைந்து விடாது – இன்னும் காஃபிர்களின் பிரார்த்தனை வழிகேட்டில் இருப்பதே தவிர வேறில்லை. (அல் குர்ஆன் 13:14)
‘எனக்கு இணையானவர்கள் என எவர்களை நீங்கள் எண்ணிக் கொண்டிருந்தீர்களோ அவர்களை நீங்கள் அழையுங்கள்’ என்று அவன் கூறக்கூடிய நாளில் இவர்கள் அவர்களை அழைப்பார்கள். ஆனால் அவர்கள் இவர்களுக்கு பதிலளிக்க மாட்டார்கள்; இன்னும் அவர்களுக்கிடையே நாசத்தை நாம் ஏற்படுத்துவோம்.’ (அல் குர்ஆன் 18:52)
எனவே எனதருமை சகோதர சகோதரிகளே மேற்காணும் வசனங்களின் மூலம் நாம் பெறும் படிப்பினைகளப் பற்றி சற்று சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
இந்த வசனங்களின் மூலம் நாம் பெறும் தெளிவுகள் யாவை எனில்: –
- பிரார்த்திப்பவரின் பிரார்த்தனைக்கு பதிலளிப்பவன் அல்லாஹ் மட்டுமே
- அல்லாஹ்விடம் மாத்திரமே பிரார்த்தனை செய்யவேண்டும்
- அல்லாஹ்வைத்தவிர மற்றவர்களிடம் பிரார்த்தனை செய்தால் அவர்களால் அந்தப் பிரார்த்தனையைச் செவியேற்க இயலாது.
- கியாம நாள் வரை அவர்களை அழைத்தாலும் அவர்களால் பதிலளிக்க இயலாது
- கியாம நானில் அல்லாஹ்வுக்கு இணை வைத்ததை அவர்கள் நிராகரித்து விடுவார்கள்.
- அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்பவருக்குத்தான் அல்லாஹ் நேர்வழி காட்டுவான்.
எனவே மேற்கண்ட வசனங்களின் அடிப்படையில், ‘பிரார்த்தனைக்கு பதிலளிப்பவன் அல்லாஹ் மட்டுமே’ என நம்பிக்கை கொண்டு அவனிடமே பிரார்த்தனை செய்ய வேண்டும். ஆனால் ‘ஷாகுல் ஹமீது அவுலியாவும் நம்முடைய பிரார்த்தனையைச் செவிமெடுத்து நமக்கு பதிலளித்து நம்முடைய தேவைகளைப் பெற்றுத்தருகிறார்’ என நம்பிக்கைக் கொண்டால் அது ‘ஷிர்க்’ என்னும் இணை வைத்தலைத் தவிர வேறொன்றுமில்லை.
அல்லாஹ் மிக அறிந்தவன்.