முன்பாவங்கள் பாவங்கள் மன்னிக்கப்படக்கூடிய இப்புனித ரமலான் மாதத்தில் நோன்பு நோற்று அதிகமாக அமல்கள் செய்து அதன் மூலம் நமது பாவங்கள் அனைத்தும் வல்ல இறைவனால் மன்னிக்கப்பபட்டு நோன்பாளிகளுக்கு அவன் வாக்களித்துள்ள ‘ரைய்யான்’ என்னும் சுவர்க்கத்தின் வாயில் வழியாக நாம் சுவர்க்கத்தில் நுழைந்திட அல்லாஹ் அருள்புரிவானாகவும்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
“இறைநம்பிக்கை என்பது எழுபதுக்கும் அதிகமான – அல்லது – அறுபதுக்கும் அதிகமான உட்பிரிவுகளைக் கொண்டதாகும். அவற்றில் மிக உயர்ந்தது, ‘வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வையன்றி வேறில்லை’ என்ற கூற்றாகும். அவற்றில் ஆகத் தாழ்ந்தது, நடைபாதையில் கிடக்கும் (முள் போன்ற) தொல்லை தருவதைப் பாதையிலிருந்து அகற்றுவதாகும். நாணமும் இறைநம்பிக்கையின் ஒரு பிரிவே” அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி). (ஆதாரம் : முஸ்லிம்)
ஈமானின் கிளைகளிலேயே மிக உயர்வானதாக ‘வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வையன்றி வேறில்லை’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறியிருப்பதை நாம் நன்கு உணர்ந்துக் கொண்டு அதற்கு எவ்விதத்திலும் களங்கம் ஏற்படாதவாறு பார்த்துக்கொள்ள வேண்டும்.
மற்றொரு அறிவிப்பில்,
“அல்லாஹ்வுக்கு எதையும் இணைவைக்காமல் (மரணித்து) அவனை (மறுமையில்) சந்திப்பவர் சொர்க்கம் செல்வார்; அவனுக்கு இணை வைத்தவராக அவனைச் சந்திப்பவர் நரகம் செல்வார்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள். (அறிவிப்பாளர் : ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி); புகாரி)
திரிமிதியில் அறிவிக்கப்பட்டுள்ள ஒரு ஹதீஸில்,
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
‘அல்லாஹ் கூறுகிறான்: மனிதனே! நீ பூமியின் அளவு பிழைகளைச் செய்து, எனக்கு இணை வைக்காமல் நீ என்னைச் சந்தித்தாலும் நான் உனக்கு பூமியின் அளவு மன்னிப்புத் தந்து உன்னை மன்னிப்பேன்’ (ஆதாரம் : திர்மிதி)
ஒருவர் பூமியின் அளவிற்கு பாவம் செய்வது என்பது நினைத்துக்கூட பார்க்கமுடியாத ஒன்று! ஆனால் அந்த அளவிற்கு ஒருவன் பாவங்கள் செய்திருப்பினும் அவற்றையாவும் மன்னித்துவிடுவதாக அல்லாஹ் கூறுகின்றான் ஒரே ஒரு நிபந்தனையின் பேரில்! அது தான் இறைவனுக்கு இணை கற்பிக்காமல் ஏகத்துவத்தில் உறுதியாக இருக்கின்ற தன்மை! இதிலிருந்து நாம் விளங்குவது என்னவென்றால், இறைவனுக்கு இணை கற்பிப்பது என்பது பூமியின் அளவு பாவங்களை விட மகாகொடியது என்பதை அறியலாம்.
அல்லாஹ் நம்மனைவர்களுக்கும் நேர்வழியைக்காட்டி, ஏகத்துவத்தில் உறுதிமிக்கவர்களாக இவ்வுலகில் வாழச்செய்து மறுமையில் நம் பாவங்கள் அனைத்தையும் மன்னித்து அவன் ஏகத்துவத்தைப் பேணி நடப்பவர்களுக்காக வாக்களித்த சுவர்க்கத்திற்கு உரியவர்களாக நம்மை ஆக்கியருள்வானாகவும்.
அடுத்ததாக நான்கு கடமைகள் ஒருசேர சங்கமிக்கின்ற இப்புனித ரமலான் மாதத்திலே, நமது இரண்டாவது கடமையாகிய தொழுகையை எடுத்துக் கொள்வோம். ஏகத்துவத்திற்கு அடுத்தபடியாக இறைவனால் மிக மிக அதிகமாக வலியுறுத்தப்பட்டக் கடமை தொழுகையாகும்.
அபூஹுரைரா (ரலி) அறிவிக்கிறார்கள்: –
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: மறுமையில் ஒரு மனிதனின் அமல்களைப் பற்றி விசாரிக்கப் படும்போது தொழுகையைப் பற்றியே முதன் முதலாக விசாரிக்கப்படும். அது சீராக அமைந்து விடுமேயானால் ஏனைய அனைத்து வணக்க வழிபாடுகளும் சீராகவே அமையும். அது சீராகவில்லையென்றால் ஏனைய அனைத்தும் சீரற்றதாகவே இருக்கும். (ஆதாரம்: ஸுனன் அபூதாவுத்)
முதல் கோணல் முற்றிலும் கோணல் என்பது போல, நம்முடைய முதல் விசாரணையான தொழுகையைப் பற்றி விசாரிக்கப்படும் போது அதில் நாம் சறுக்கி விழுவோமேயானால் அதற்குப் பிறகு வரக்கூடியவைகள் அனைத்தும் எவ்வாறு இருக்கும் என்று கூறித்தெரிவதில்லை! அல்லாஹ் நம் அனைவரையும் காப்பாற்றுவானாகவும்.
நம்மில் சிலர் தொழுகையின் முக்கியத்துவத்தைப் பற்றிய அறியாமையினால் அதைப் பற்றி அலட்சியமாக இருக்கின்றனர். சிலர் ஒவ்வொரு வருடமும் நோன்பு காலங்களில் மட்டும் பள்ளிக்கு வருகின்றனர். சிலர் ஜூம்ஆவோடு சரி! இன்னும் சிலரோ பெருநாளைக்கு தொழுவதோடு சரி! மற்ற நேரங்களில் பள்ளிக்கு வருவதேயில்லை! இவர்களைப் பற்றி நாம் என்ன கூறுவது?
வேதனையான விசயம் என்னவென்றால், ரமலானின் மகத்துவத்தை அறிந்தவர்களாக இப்புனித மாதத்தை சங்கைப்படுத்தும் முகமாக பகல் காலங்களில் நோன்பு நோற்கும் முஸ்லிம்களில் சிலர் கூட நோன்பு வைத்துக்கொண்டே தொழுவதில்லை!! எவ்வளவு பெரிய அறியாமை? காரணம் நோன்பின் மகத்துவத்தை அறிந்திருந்த இவர்கள் தொழுகையை விடுவதால் என்ன கேடு ஏற்படும் என்பதை அறிந்திருக்கவில்லை!
நரக வாசிகளைப் பற்றிக் குறிப்பிடும் போது அல்லாஹ் கூறுகிறான்:
‘உங்களை ஸகர் (நரகத்தில்) நுழைய வைத்தது எது?’ (என்று கேட்பார்கள்.) அவர்கள் (பதில்) கூறுவார்கள்: ‘தொழுபவர்களில் நின்றும் நாங்கள் இருக்கவில்லை. ‘அன்றியும், ஏழைகளுக்கு நாங்கள் உணவும் அளிக்கவில்லை. ‘(வீணானவற்றில்) மூழ்கிக்கிடந்தோருடன், நாங்களும் மூழ்கிக்கிடந்தோம். ‘இந்த நியாயத் தீர்ப்பு நாளை நாங்கள் பொய்யாக்கிக் கொண்டும் இருந்தோம். ‘உறுதியான (மரணம்) எங்களிடம் வரும்வரையில் (இவ்வாறாக இருந்தோம்’ எனக் கூறுவர்). (அல்-குர்ஆன் 74:42-47)
தொழாததன் காரணத்தால் அல்லாஹ் நரகத்தில் புகுத்துவான் என்பதைக் விளங்காத காரணத்தால் தான் ஏகத்துவத்திற்கு அடுத்தபடியாக உள்ள தொழுகைகளில் இவர்கள் அலட்சியம் காட்டுகின்றனர். மேலும் ஒருவர் தொழவில்லையானால் அவருடைய,’ ஏக இறைவனை மட்டும் வணக்கத்திற்கு உரியவனாக ஏற்றுக்கொண்டிருக்கும் ஈமானில்’ குறை இருப்பதாகவே கருத முடியும்! ஏனென்றால் நபி (ஸல்) அவர்கள் கூறியிருக்கிறார்கள்:
முஸ்லிமுக்கும் காஃபிருக்கும் இடையே உள்ள உடன்படிக்கையே தொழுகை தான். அதனை எவன் விட்டு விடுகின்றானோ அவன் காஃபிராகி விட்டான். (ஆதாரம்: அஹ்மத் , திர்மிதி)
ஒருவனை இஸ்லாத்தைவிட்டே அப்புறப்படுத்தக்கூடிய செயலான தொழுகையை விடும் இச்செயலை சர்வசாதாரணமாக செய்கின்ற நாம் நம்மை நாமே பரிசோதித்துக் கொள்ளக் கடமைப்பட்டிருக்கின்றோம். நம்மில் அதிகமானவர்கள் ரமலான் மாதங்களில் ஐந்து ஆறு சப்புகளுக்கு மேலாக வருகை தந்து பள்ளியை நிறைக்கின்றோம். ஆனால் ரமலான் முடிந்த அடுத்தடுத்த நாட்களில் இரண்டு சப்புகள் கூட ஒழுங்காக நிறைவேறாத அளவிற்குத் தான் நம்முடைய வருகைகள் இருக்கின்றது. தொழுகை என்பது ஒருவனுடைய இறுதி மூச்சு இருக்கும் வரை கடைபிடிக்கப்பட வேண்டிய ஒன்றாகும். அல்லாஹ் கூறுகின்றான்:
“உமக்கு மரணம் வரும்வரை உமது இறைவனை வணங்குவீராக!” (15:99)
எனவே தொழுகையை விடுவதற்கு எப்பொழுமே நமக்கு அனுமதியில்லை! மேலும் தொழுகையை விடுவது எந்த அளவிற்கு இட்டுச்செல்லும் என்பதை அல்லாஹ் எச்சரிக்கின்றான்:
நீங்கள் அவன் பக்கமே திரும்பியவர்களாக இருங்கள்; அவனிடம் பயபக்தியுடன் நடந்து கொள்ளுங்கள்; தொழுகையையும் நிலை நிறுத்துங்கள்; இன்னும் இணைவைப்போரில் நீங்களும் ஆகி விடாதீர்கள். (அல்குர்ஆன் 30:31)
ஒருவர் நம்முடைய மார்க்கச் சகோதரர் ஆவதற்குரிய நிபந்தனைகளுள் ஒள்றாக அல்லாஹ் தொழுகையைக் குறிப்பிடுவதை நாம் நன்கு கவனிக்க வேண்டும். தொழாதவர்கள் மார்க்கச் சகோதரருக்கு உரிய தகுதியை இழக்க நேரிடும் என்பதை உணரவேண்டும்.
ஆயினும் அவர்கள் தவ்பா செய்து (மனந்திருந்தி தம் தவறுகளிலிருந்து விலகி) தொழுகையைக் கடைப்படித்து, ஜகாத்தையும் (முறையாக) கொடுத்து வருவார்களானால், அவர்கள் உங்களுக்கு மார்க்கச் சதோதரர்களே; நாம் அறிவுள்ள சமூகத்தினருக்கு (நம்) வசனங்களை விளக்குகிறோம். (அல்குர்ஆன் 9:11)
ஒருவன் நோன்பு நோற்கிறான், ஆனால் தொழுவதில்லை. இவன் நிலை என்ன?
“தொழாதவனுடைய நோன்பு ஏற்றுக் கொள்ளப்படுவதில்லை. ஏனென்றால் அவன் இஸ்லாத்தை விட்டு வெளியேறிவிட்டான் என்று ஒருவன் தீர்ப்பளித்தால் அவன் குற்றவாளியா?” என மார்க்க அறிஞர் இப்னு உதைமீன் (ரஹ்) அவர்களிடம் வினவப்பட்ட போது, பின்வருமாறு பதிலளித்தார்கள்: –
நோன்பு நோற்றாலும் தொழாததன் காரணத்தால் அத்தீர்ப்பு சரியானதே. ஏனென்றால் தொழுகையானது இஸ்லாத்தின் தூண்களில் ஒன்றாகும். தொழுகையில்லாமல் இஸ்லாம் நிலைபெறாது. எனவே தொழுகையை விட்டவன் நிராகரிப்பவனாகின்றான். மேலும் நிராகரிப்பாளனின் நோன்போ, தர்மமோ ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை.
அல்லாஹ் கூறுகிறான்: –
“அவர்களுடைய தானங்கள் ஏற்றுக் கொள்ளப்படாது என்று (அல்லாஹ்) தடுத்திருப்பதற்குக் காரணம் யாதெனில்; அவர்கள் அல்லாஹ்வையும், அவன் தூதரையும் நிராகரித்தார்கள்; மேலும் மிகச் சடைந்தவர்களாகவேயன்றி தொழுகைக்கு அவர்கள் வருவதில்லை. இன்னும் அவர்கள் வெறுப்புடனேயன்றி தானங்கள் செய்வதில்லை” (அல் குர்ஆன் 9:54)
மேற்கூறப்பட்ட ஆதாரங்களின் அடிப்படையில் தொழுகையற்ற நோன்பானது எவ்விதப் பயனும் அளிப்பதில்லை என்பது தெளிவாகின்றது. எனவே முதலாவதாக அல்லாஹ்விடம் பாவமன்னிப்புக் கேட்டுவிட்டு அடுத்ததாக தொழுகையை நிலைநாட்ட வேண்டும்.
எனவே அன்பு சகோதரர்களே, முஸ்லிமுக்கும் இறை நிராகரிப்பாளனுக்கும் உள்ள உடன்படிக்கையே தொழுகை என்றும் தொழுகைப் பேணி நடப்பவர்களே மார்க்க சகோதரர்கள் என்றும் தொழாதவர்கள் ‘ஸகர்’ என்ற நரகத்தில் நுழைவார்கள் என்றும் கடுமையான எச்சரிக்கைகள் நமக்கு விடப்பட்டிருப்பதால் நாம் அனைவரும் தொழுகை விசயத்தில் மிகுந்த கவனமுடன் செயலாற்றக் கடமைப்பட்டிருக்கின்றோம்.
அடுத்ததாக, தொழக்கூடியவர்கள் செய்கின்ற தவறுகளையும் அவர்கள் அவற்றிலிருந்து தம்மை விலக்கிக்கொள்ள வேண்டிய அவசியத்தையும் பற்றி இன்ஷா அல்லாஹ் அடுத்த தொடரில் பார்ப்போம்.