மூலக்கட்டுரை (ஆங்கிலம்) : K.M.A. முஹம்மது ஜபுருல்லாஹ் M.Tech.
தமிழில் : புர்ஹான்
அல்லாஹ்வுக்கே புகழ் அனைத்தும். அவனே (நாம் அறிந்த, அறியாத) பேரண்டத்தின் அதிபதி. அவன் இறையச்சமுடையவருக்கு நல்ல வெகுமதிகளையும், அவனுடைய வரம்பை மீறுபவர்களுக்கு பெரிய அழிவையும் தரக்கூடியவன். அல்லாஹ் ஒருவனைத் தவிர வேறு இறைவன் இல்லை; அவனுக்கு யாதொரு இணையுமில்லை; சர்வ வல்லமையும், அதிகாரமும் அவனுக்கே உரியது என்று நான் சாட்சி கூறுகிறேன். மேலும், முஹம்மது (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் அடியாரும், திருத்தூதருமாவார்கள்; அவர்கள் நபி மார்களுக்கு எல்லாம் இறுதி முத்திரையாக இருக்கிறார்கள்; சமுதாயம் முழுவதற்கும் தலைவராக இருக்கிறார்கள் என்று நான் சாட்சி கூறுகிறேன். அல்லாஹ்வின் சாந்தியும், சமாதானமும் முஹம்மது (ஸல்) அவர்கள் மீதும், அவர்களின் குடும்பத்தினர் மீதும், அவர்களுடைய தோழர்கள் மற்றும் அவர்களை இறுதி தீப்பு நாள் வரை பின்பற்றக் கூடியவர்கள் அனைவர் மீதும் என்றென்றும் உண்டாவதாக.
அல்லாஹ் ஸுப்ஹானஹுவத்தஆலா, அவனுடைய தூதர் முஹம்மது (ஸல்) அவர்களை, நேர்வழிகாட்டியுடனும், மனித குலத்திற்கு ஓர் அருளான சத்திய இஸ்லாமிய மார்க்கத்துடனும், நன்மைகளைப் புரிவோருக்கு ஓர் முன்மாதிரியாகவும் அனுப்பி வைத்தான். அல்லாஹ் மனித குலம் அனைத்திற்கும், அவர்கள் தங்களைச் சீர்திருத்திக் கொள்வதற்குத் தேவையான அனைத்து விஷயங்களையும், அதாவது மார்க்கம் மற்றும் அன்றாட அலுவல்களை இறை நம்பிக்கையுடன் நடத்திச் செல்வதற்கும், நல்ல நடத்தைகளையும், அழகிய முன்மாதிரிகளையும், போற்றத்தக்க நற்குணங்களையும், நம்முடைய நபி முஹம்மது (ஸல்) அவர்கள் மூலமாகவும், அவர்களுக்கு அருளிய குர்ஆன் மற்றும் அவர்களுடைய சுன்னத்தான வழிமுறைகளின் மூலமாகவும் காட்டிவிட்டான்.
நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஒரு ஸஹீஹான ஹதீஸ் கூறுகிறது:
“நான் உங்களிடம் ஒரு ஒளிமயமான பாதையை விட்டுச் செல்கிறேன். அதில் இரவு கூட பகலின் ஒளியைப் போல் இருக்கிறது”
இந்தியாவிலும், இந்திய முஸ்லிம்கள் குடியேறி வசிக்கும் பகுதிகளில் எல்லாம் இப்போது நடைபெறுவது மகவும் வருத்தமான விஷயங்கள். உண்மையான இஸ்லாத்தின் போதனைகளை மிகவும் அறியாதவர்களாக நமது பெரும்பான்மையான சகோதர, சகோதரிகள் இருக்கிறார்கள். இதற்கு நாம் முன்னர் பிரிட்டீஷ் அரசால் அறிமுகப்படுத்தப்பட்டு, பின்னர் கல்வியிலும், கலாச்சாரத்திலும் மதசார்பற்றக் கொள்கையைப் பின்பற்ற விரும்பிய இந்திய அரசாங்கத்தால் எடுத்துக்கொள்ளப்பட்ட மதசார்பற்றக் கல்விக் கொள்கையைத்தான் குறை கூறவேண்டியதிருக்கிறது. ஆயினும் கல்வித்துறையினர், அவ்வாறு (மதசார்பற்றக் கல்விக் கொள்கை என்று) கூறிக்கொண்டே இஸ்லாமிய மார்க்கத்திற்கு முரணான இஸ்லாமிய இலக்கியங்களையும், பிற மதங்களிலுள்ள புராணங்களையும், இதிகாசங்களையும் அதிகமான அளவில் பள்ளி மற்றும் கலைகல்லூரி மாணவர்களின் பாடத்திட்டத்தில் நுழைத்துவிட்டனர். எனவே ஒரு முஸ்லிம் மாணவன் பள்ளி அல்லது கல்லுரியிலிருந்து வெளிவரும் போது, பிற மதங்களைப் பற்றியும், அவர்களின் கடவுளர்களைப் பற்றியும் அறிந்திருக்கும் அளவிற்கு, இஸ்லாமிய அடிப்படைக் கொள்கையான தவ்ஹீது, மற்றும் நபி (ஸல்) அவர்களின் நேரிய வழிகாட்டுதல்களை அறிந்திருக்கவில்லை.
உண்மையான இஸ்லாத்தின் அடிப்படைகளை அறியாதவர்கள், தங்களுக்குள் நான்கு மத்ஹப்கள், பல தர்ஹாக்கள், மற்றும் ராவுத்தர்கள், மரைக்காயர்கள், தக்னிகள், லெப்பைகள் சைய்யிதுகள் போன்ற பிரிவினர்களாகப் பிரிந்துக் கிடக்கின்றனர். சில முஸ்லிம்கள் ஒரு படி மேலே சென்று, (இஸ்லாத்தின் கொள்கைகளுக்காகப் பாடுபட்ட) அவ்லியாக்களின் சமாதிகளுக்குச் செல்வதன் மூலமும், மாற்று மதத்தவர்கள் தங்களின் வழிபாட்டுத்தலங்களில் பூ , வாழைப்பழம் போன்றவைகளை வைத்து வழிபடுவதைப்போல் அந்த சமாதிகளில் சில சடங்குகளைச் செய்வதன் மூலமும், மேலும் என்றோ இறந்துவிட்ட அந்த அவ்லியாக்களிடம் பிரார்த்தித்து உதவி தேடுவதன் மூலமும் அவர்களை வழிபடுகின்றனர்.
இவ்வாறு செய்பவர்கள், மரணித்த ஒருவர் அவர் நல்லடியாராகவோ அல்லது நிராகரிப்பவராகவோ இருந்தாலும் அவரால் உயிரோடிருக்கும் ஒருவரிடமிருந்து எதையும் கேட்க முடியாது என்ற அடிப்படை மார்க்க அறிவு கூட இல்லாதவர்களாக இருக்கின்றனர். ஏற்கனவே மரணித்து விட்ட இறைநேசர்களும், நல்லடியார்களும் ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கிறார்கள் என்றும், அவர்கள் நியாயத் தீர்ப்பு நாளின் போது தான் எழுப்பப்படுவார்கள் என்றும் ஆதாரப்பூர்வமான ஹதீஸ்கள் கூறுகின்றன. ஷிர்க் செய்பவர்கள், தாம் எந்த அளவிற்கு கொடிய பாவத்தைச் செய்கிறோம் என்பதை உணராதவர்களாகவே இருக்கின்றனர். மேலும் அவர்கள் ஷிர்க் செய்வது (இணை வைப்பது) என்பது ‘கொலை, கொள்ளை, விபச்சாரம் போன்ற கொடிய குற்றங்களைவிட ஆபத்தானது’ என்ற இலேசான உணர்வு கூட இல்லாதவர்களாக இருக்கின்றனர்.
திருமறையில் அல்லாஹ் கூறுகிறான்:
“நிச்சயமாக அல்லாஹ் இணைவைத்தலை மன்னிக்க மாட்டான். ஆனால் மற்ற பாவங்களைத் தான் நாடியவர்களுக்கு மன்னிப்பான“(4:48)
மேலும் (இஸ்லாத்தில் நுழைக்கப்பட்ட) பித்அத்களை (புதிய அமல்களை)ச் செய்யும் நமது முஸ்லிம் சகோதரர்கள் வேண்டுமென்றே அந்த தவறான செயல்களைச் செய்வதில்லை. உண்மையில் அவர்கள், இறைவனிடமிருந்து நல்ல வெகுமதியும், சுவர்க்கமும் கிடைக்கும் என்ற உயரிய எண்ணத்தில் தான் இச்செயல்களைச் செய்கின்றனர். அல்லாஹ் தன் திருமறையில் அருளிய தெளிவான வசனமான
“இன்றைய தினம் உங்களுக்காக உங்கள் மார்க்கத்தை பரிபூர்ணமாக்கி விட்டேன். மேலும் நான் உங்கள் மீது என் அருட்கொடையைப் பூர்த்தியாக்கி விட்டேன். இன்னும் உங்களுக்காக நான் இஸ்லாம் மார்க்கத்தையே (இசைவானதாகத்) தேர்ந்தெடுத்துள்ளேன்” (அல்குர்ஆன் 5:3)
என்ற வசனத்தை நமது சகோதரர்கள் முற்றிலுமாக மறந்துவிட்டதே அவர்களுடைய அறியாமைக்கு காரணமாகும். இவ்வசனத்தில், ‘இஸ்லாம் மார்க்கத்தை பரிபூர்ணமாக்கிவிட்டதாக’ அல்லாஹ் கூறுகிறான். அதுவும் நபி (ஸல்) அவர்கள் உயிருடன் இருக்கும் போதே! இதன் மூலம், ‘இஸ்லாமிய மார்க்கத்தில் எதையும் சேர்க்கவோ அல்லது குறைக்கவோ யாருக்குமே உரிமையில்லை’ என்பது தெள்ளத் தெளிவாகிறது. ஆனால் நமது சகோதரர்கள் எண்ணற்ற புதிய அமல்களை உருவாக்கிவிட்டு அவைகளை ‘நல்ல பித்அத் (பித்அத்துல் ஹஸனாஹ்)’ என்றும் கூறுகின்றனர்.
நபி முஹம்மது (ஸல்) அவர்கள்,
“என்னுடைய வழிமுறைகளையும் நேர்வழி பெற்ற கலீபாக்களின் வழிமுறைகளையும் வலுவாகப் பற்றிப் பிடித்துக்கொள்ளுங்கள். இவைகளை உங்களின் கடைவாய் பற்களுக்கு இடையில் பற்றிப்பிடித்துக் கொள்ளுங்கள். (இஸ்லாத்தில்) நுழைக்கப்படும் புதிய அமல்களைப்பற்றி எச்சரிக்கையாக இருங்கள். ஒவ்வொரு புதிய அமலும் பித்அத் ஆகும். ஓவ்வொரு பித்அத்தும் வழிகேடு ஆகும். ஓவ்வொரு வழிகேடும் நரகத்திற்குரியவை” என்று கூறினார்கள். (ஸஹீஹ் அல்-ஜாமிஅஸ் ஸகீர். ஹதீஸ் எண். 2549)
பித்அத் பற்றி விவாக அறிந்துக்கொள்வதற்கு மற்றொரு உதாரணத்தை நாம் எடுத்துக் கொள்வோம்: –
கூத்தாநல்லூரில் உள்ள பள்ளிவாயில் ஒன்றில் பஜ்ர் தொழுகைக்காக நாம் செல்வதாக வைத்துக் கொள்வோம். பஜ்ருடைய கடமையான தொழுகை இரண்டு ரக்அத் என்பதை, அதிகப்படுத்தி நான்கு ரக்அத் களாக மாற்றியமைத்த அந்தப் பள்ளியின் இமாம், இதை தாம் மறதியில் செய்யவில்லை என்றும், பஜ்ருடைய கடமையான இரண்டு ரக்அத்தை நான்கு ரக்அத்களாக அதிகப்படுத்த விரும்பியே அவ்வாறு செய்ததாகவும் கூறுவதாக வைத்துக் கொள்வோம். இப்போது இதை நாம் அங்கீகரித்து அவரை அவ்வாறு மாற்றுவதற்கு அனுமதிப்போமா? நிச்சயமாக அனுமதிக்க மாட்டோம். ஏனென்றால் பஜ்ருடைய கடமையான தொழுகை இரண்டு ரக்அத்கள் என்பதும், இதுவே நமது நபி (ஸல்) அவர்கள் காட்டித்தந்த வழிமுறை என்பதும் நம் அனைவருக்கும் தெரியும். ஆகையால் அதை மாற்றுவதற்கு யாருக்குமே உரிமையில்லை. எவருக்கும் அந்த உரிமை இல்லை. நாம் அனைவரும் இவ்விசயத்தில் ஒற்றுமையாக இருக்கிறோம். இதைப் போலவே ஒவ்வொரு புதிய அமலும் தடுத்து நிறுத்தப்படவேண்டும். ஏனென்றால் ஒவ்வொரு புதிய அமலும் நபி (ஸல்) அவர்களால் “ஹராம்” என்று தடை செய்யப்பட்ட ‘பித்அத்’ ஆகும்.
மேலும் மற்றொரு ஸஹீஹான ஹதீஸில், நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: –
“என்னால் அனுமதிக்கப்படாத எந்த அமலும் நிராகாக்கப்படும்”
இதன் மூலம் நாம் அறிவது என்னவென்றால், ஒரு முஸ்லிம் புதிய அமலை (பித்அத்) செய்வானாயின், அவருக்கு எந்த நற்கூலியும் கிடைக்காது. ஆனால் பாவங்கள் அதிகரிக்கும். இதை பின்வரும் இரண்டு உதாரணங்கள் மூலம் விளக்கலாம்.
அல்லாஹ் சுப்ஹானஹு வத்தஆலா, உமர் (ரலி) அவர்களுக்கு கனவின் மூலம் தொழுகைக்கான அழைப்பை (பாங்கு) கற்றுத்தந்ததை நபி (ஸல்) அவர்கள் அங்கீகரித்தார்கள். மேலும் மற்றொரு நபித்தோழரும் இதே கனவைக் கண்டார். நபி (ஸல்) அவர்களால் அங்கீகரிக்கப்பட்ட அந்த பாங்கு அல்லாஹு அக்பர் அல்லாஹு அக்பர் என்று ஆரம்பமாகின்றது. ஆனால் தற்போது சில கிராமங்களில் பாங்கு கூற துவங்கும் முன் நபி (ஸல்) அவர்களின் ஸலவாத்தைக் கூறி ஆரம்பம் செய்கின்றனர். இன்னும் சில கிராமங்களில் கலிமா தம்ஜீது (ஸுப்ஹானல்லாஹி வல்ஹம்துலில்லாஹி வலாஇலாஹ…) ஓதி அதன் பின்னர் ஸலவாத்து கூறி பாங்கை ஆரம்பம் செய்கின்றனர். சில காலங்கள் கழித்து, பாங்கிற்கு முன் இன்னும் வேறு சிலவற்றையும் அவர்கள் சேர்க்கக் கூடும்.
கூத்தாநல்லூரில் சிலர் பாங்கு கூறும் போது திருக்குர்ஆனின் ஆயத்துக்களைக் கூடச் சேர்த்து விட்டனர். “இன்னல்லாஹ வமலாயிகத்திஹி யுஸல்லூன அலன்னபி யா அய்யுகல்லதீன ஆமனூ ஸல்லூ அலைஹி வஸல்லிமு தஸ்லீமா” என்பதையும் சேர்த்துக் கூறி பின்னர் ஸவாத்து, கலிமா போன்றவற்றை ஓதி பாங்கை கூறத் துவங்குகின்றனர். இன்னும் சில வருடங்கள் சென்ற பிறகு, குர்ஆன் ஓதுவது ‘நல்ல அமல்’ என்று நினைத்து குர்ஆனின் நீண்ட அத்தியாயமான சூரத்துல் பகராவை பாங்கு கூறுவதற்கு முன்னால் ஒருவர் ஓத முனைந்தால், யாராவது அதை அனுமதிப்பாரா?
இவைகள் எல்லாம் எதை குறிக்கிறது? சலவாத்து, மூன்றாம் கலிமா மற்றும் குர்ஆன் ஆயத்துக்களை ஓதுதல் இவைகள் ஒவ்வொன்றுமே ‘நல்ல அமல்’களாக இருந்த போதிலும், இவைகளை தொழுகைக்கான பாங்கு கூறுவதற்கு முன்னால் சேர்ப்பது, அல்லாஹ் ஸுப்ஹானஹு வத்த ஆலா மற்றும் நபி (ஸல்) அவர்களால் அங்கீகரிக்கப்படாததாகும். அல்லாஹ்வும், ரஸுல் (ஸல்) அவர்களும் அங்கீகரிக்காத ஒன்றை ஒரு முஸ்லிம் எப்படி பாங்கில் சேர்க்க முடியும்? அதிகப்பிரசங்கித்தனமான இச்செயல்களைச் செய்வது, இது போன்ற நல்ல அமல்களை அல்லாஹ்வும், ரஸுல் (ஸல்) அவர்களும் காட்டித்தரவில்லை, அதனால் பல நூற்றாண்டுகளுக்குப் பின்னர் வந்த முஸ்லிம்கள் இவைகளைக் கண்டுபிடித்து மார்க்கத்தில் சேர்த்தனர் என்று பிரகடனப்படுத்துவதாகும். என்ன ஒரு தைரியம்? (நவூது பில்லாஹி மின்ஹா). ஷைத்தான்கள் நம்மை மூழ்கடிக்க விரும்பும் இது போன்ற தீமைகளிலிருந்து அல்லாஹ் நம்மனைவரையும் பாதுகாத்து மன்னிக்கவேண்டும். அதனால் தான் அல்லாஹ் குர்ஆனில் கூறுகிறான்:
“து அல்லிமுஹுமுல்லாஹு ஃபீ தீனிகும்? “
பொருள்: “அல்லாஹ்வுக்கு அவனுடைய மார்க்கத்தை அவர்கள் கற்றுக் கொடுக்கிறார்களா?”
அல்லாஹ் நமக்காக அவனுடைய மார்க்கத்தை அனைத்து துறைகளிலும் பரிபூரணப்படுத்திவிட்டு, அதை அவனுடைய தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் மூலமாக நமக்கு காட்டிவிட்டான். இதன் மீது ஏதேனும் சந்தேகம் இருப்பவர்களே புதிய அமல்களை உருவாக்குகிறார்கள். புதிய அமல்களைச் செய்பவர்களை அல்லாஹ் தண்டிப்பது, அவர்கள் அந்த அமல்களைச் செய்வதினால் அல்ல; மாறாக, அவர்கள் ரஸுல் (ஸல்) அவர்களுடைய கட்டளையான மார்க்கத்தில் எதையும் புதிதாக உருவாக்கக் கூடாது என்பதை மீறியதற்காகவும், அல்லாஹ்வுடைய வார்த்தையான “அல்லாஹ் மார்க்கத்தை பரிபூரணமாக்கிவிட்டான்” என்பதற்கு எதிரான நம்பிக்கையான ‘மார்க்கம் இன்னும் பரிபூரணமாக்கப்படவில்லை, அதனால் தான் புதிய அமல்களை உருவாக்கி அதைச் செம்மைப் படுத்துகிறோம்’ என்ற தவறான நம்பிக்கையைக் கொண்டிருந்ததற்காகவும் தான் அல்லாஹ் அவர்களைத் தண்டிக்கிறான். நவூதுபில்லாஹி மின்ஹா.
நாம் நபி (ஸல்) அவர்களுடைய காலத்தில் நடந்த மற்றொரு சம்பவத்தை உதாரணமாக எடுத்துக் கொள்வோம்.
நபி (ஸல்) அவர்கள், ஒரு நபித்தோழர் (ரலி) ஒருவருக்கு தூங்குவதற்கு முன் ஓதவேண்டிய நீண்ட துஆ ஒன்றைக் கற்றுக்கொடுத்தார்கள். அது பின்வருமாறு ஆரம்பமாகிறது. ‘ஆமன்து பிகிதாபிக்கல்லதீ அன்ஜல்த வநபிய்யிக்கல்லதீ அர்ஸல்த’ என்று செல்கிறது அந்த துஆ. அதைக் கற்றுக் கொண்ட நபித்தோழர் (ரலி) தன் வீட்டிற்குச் சென்றுவிட்டு மனனம் செய்து மறுநாள் நபி (ஸல்) அவர்களிடம் வந்து முந்தைய தினம் தாம் மனனம் செய்ததை ஒப்புவிக்கும் போது, ‘ஆமன்து பிகிதாபிக்கல்லதீ அன்ஜல்த வரஸுலிக்கல்லதீ அர்ஸல்த’ என்று கூறியபோது நபி (ஸல்) அவர்கள் “லா” இல்லை. நான் எதைக் கூறினேனோ அதையே நீயும் கூறு என்றார்கள். நபி (ஸல்) அவர்கள் கூறியதற்கும், அந்த நபித்தோழார் (ரலி) கூறியதற்கும் என்ன வித்தியாசம்? நபி (ஸல்) அவர்கள் கற்றுக் கொடுத்த “நபி” என்ற வாத்தைக்குப் பதிலாக, “ரஸுல்” என்ற வார்த்தையைக் கூறினார் நபித்தோழர். இரண்டு வார்த்தைகளும் ‘தூதர்’ என்ற ஒரே பொருளைக் கொண்டது தான். உண்மையில் “ரஸுல்” என்ற வார்த்தை “நபி” என்ற வார்த்தையைவிட சற்று அந்தஸ்து கூடியது. ஏனென்றால் “ரஸுல்” என்பவர் வேதங்களும், சட்டதிட்டங்களும் கொடுத்து அனுப்பப்பட்ட தூதர் ஆவார். “நபி” என்பவர் மக்களை எச்சரிக்கைச் செய்ய அனுப்பப்பட்ட தூதர் ஆவார். எனினும் நபி (ஸல்) அவர்கள் அந்த நபித்தோழருக்கு ஒரே ஒரு வார்த்தையைக் கூட மாற்றுவதற்கு அனுமதியளிக்கவில்லை.
இவ்வாறு தான் நபி (ஸல்) அவர்கள் காலத்திலும், அவர்களுக்குப் பின் வந்த காலத்திலும் இஸ்லாம் எந்தவொரு மாற்றத்திற்கும் உட்படாமல் பாதுகாக்கப்பட்டது. ஆனால் நம்முடைய காலத்தில் நடைபெறுவது என்ன? நம்முடைய முன்னோர்களும், ஹஜ்ரத்மார்களும், நாமும் இஸ்லாத்தின் பல விஷயங்களில் மாற்றம் செய்ததோடல்லாமல், எண்ணற்ற புதிய அமல்களையும் உருவாக்கி அவைகளை ‘நல்ல அமல்கள் (பித்அத்துல் ஹஸனா)’ என்று வேறு அழைக்கிறோம். ஆனால் இன்னமும் ‘நபி (ஸல்) அவர்களின் சுன்னத்தைப் பின்பற்றி வாழ்பவர்கள் நாங்கள்’ என்று நம்மை நாமே கூறிக்கொள்கிறோம். இது விசித்திரமாக இல்லையா?
நம் குடும்பத்தில் மரணித்த ஒருவருக்காக ஓதப்படும் 3 ஆம் நாள் பாத்திஹாவை எடுத்துக் கொள்வோம். தம் உறவினர் இறந்ததற்காக 3 ஆம் நாள் பாத்திஹா ஓதுதல் என்ற புதிய அமலை (பித்அத்) செய்யும் ஒருவர், பின்வரும் இரு விஷயங்களோடு சம்பந்தப்படுகிறார். (அதாவது பின்வரும் குற்றங்களைச் செய்தவர் போலாகிறார்)
1) அல்லாஹ் இந்த நல்ல அமலைச் செய்யச் சொல்லவில்லை. அதனால் நானே இதை உருவாக்கினேன். அதாவது இறந்தவருக்கு சுவர்க்கத்தைத் தரக்கூடியவல்ல இந்த அற்புதமான அமலை அல்லாஹ் கூறுவதற்கு மறந்து விட்டான். அதனால் தான் நான் இதைக் கண்டுபிடித்து இஸ்லாத்தில் சோத்து விட்டேன். அல்லது யாரோ ஒருவர் கண்டுபிடித்து ஏற்கனவே மார்க்கத்தில் சோத்துவிட்டார். நானும் அதை பின்பற்றுகிறேன்.
என்ன ஒரு இறை நிந்தனை! நவூதுபில்லாஹ் மின்ஹா! குர்ஆன் சூரத்துல் மர்யமில் அல்லாஹ் கூறுகிறான், “வமா காண ரப்புக்க நஸீயா”
பொருள்: உமது இறைவன் எதையும் மறக்கக்கூடியவன் அல்ல.
மற்றொரு வசனத்தில் (ஆயத்துல் குர்ஸி), அல்லாஹ் தன்னைப்பற்றியே கூறுகிறான், “லா த ஹுதூஹும் சினத்துன் வலா நவ்ம்”
பொருள்: அவன் தூங்குவதும் இல்லை, மேலும் சிற்றுறக்கமும் அவனைப்பிடிப்பதில்லை (அல்குர்ஆன் 2:255)
2) மேலும் அல்லாஹ் நபி (ஸல்) அவர்களை மனிதகுலம் முழுவதற்கும் நபியாகவும், அனைத்து இறை நம்பிக்கையாளார்களுக்கும் மார்க்க விஷயங்களில் பின்பற்ற வேண்டியதற்கு ஓர் முன்மாதிரியாகவும் அனுப்பினான். யாராவது ஒரு முஸ்லிம் நபி (ஸல்) அவர்கள் காட்டித்தந்த வழிமுறைகள் எங்களுக்குப் போதவில்லை, அதனால் தான் நாங்கள் இன்னும் சில நல்ல புதிய அமல்களையும் செய்து, இறைவனிடமிருந்து திருப்தியைப் பெற்று அதற்குப் பரிகாரமாக சுவர்க்கத்தை அடைய விரும்புகிறோம் என்று நினைத்தால், அது நபி (ஸல்) அவர்களை அவமதித்து, அவர்களின் நபித்துவத்தையே கேலிக்குரியதாக்கி, ‘அவர்கள் நமக்கு நல்லமல்கள் எல்லாவற்றையும் கூறவில்லை, சிலவற்றை கூறாமலேயே சென்றுவிட்டார்கள்’ என்று கூறுவது போலாகும். என்ன ஒரு மோசமான இறை நிந்தனை! இது நமது நபி (ஸல்) அவர்களை மட்டும் இழிவுபடுத்தவில்லை, மேலும் அல்லாஹ்வுக்கு தூதரைத் தோந்தெடுக்கத் தெரியவில்லை என்றும் பொருள்படுகிறது. இவ்விசயம் மீண்டும் அல்லாஹ்விடமே செல்கிறது. அல்லாஹ் நம்மனைவரையும் இதுபோன்ற புதிய பித்அத்களை செய்வதிலிருந்து காப்பாற்றி மன்னிப்பானாகவும். அஸ்தபிருல்லாஹில் அளீம்.
நாம் செய்யக்கூடிய இந்த புதிய அமல்கள் எவ்வளவு பெரிய கொடிய பாவம் என்பதை நாம் உணர்வதில்லை. ஏனென்றால் அந்த அளவிற்கு பித்அத் அன்றாட வாழ்வில் நாம் செய்யும் செயல்களாகிவிட்டது. அனுதினமும் சிலையை வணங்கும் ஒருவர் அவ்வாறு செய்வது தவறு என்று எப்படி உணராமல் இருக்கிறாரோ, அதுபோலவே பித்அத் புரியும் முஸ்லிமும் தான் செய்யும் தீமையின் விளைவுகளை உணராமல் அதை தொடாந்து செய்துவருகிறார். அல்லாஹ் ஒவ்வொரு நிமிட நேரத்திலும், வினாடியிலும் நாம் செய்யும் அனைத்து செயல்களையும் பதிவுசெய்தவாறு இருக்கிறான். நம்முடைய அனைத்துச் செயல்களுக்கும் இறுதிதீப்பு நாளில் நாம் கணக்கு கூறவேண்டியதிருக்கிறது. நாம் அல்லாஹ்வுக்கு பயந்து பித்அத் போன்ற செயல்களை செய்வதில் இருந்தும் தவிர்ந்து இருக்க வேண்டும்.
அல்லாஹ், நம்மை அவனுடைய மார்க்கத்தில் தெளிவு உள்ளவர்களாக்கி, நம்முடைய இதயத்தையும் ஒளிவுள்ளதாக்கி, அவனால் ஏற்றுக் கொள்ளக்கூடிய வகையில் அவனுடைய மார்க்கத்தைப் பின்பற்றக்கூடியவர்களாக நம்மை ஆக்கி அருள்புரிவானாகவும். ஆமின். வஆகிருதாவானா அனில்ஹம்துலில்லாஹி ரப்பில் ஆலமீன்.
K.M.A. முஹம்மது ஜபுருல்லாஹ் M.Tech.
யான்பு அல் சினையா.