பிஸ்மில்லாஹ் வஸ்ஸலாத்து வஸ்ஸலாமு அலா ரஸூலுல்லாஹ்.
அல்லாஹ் இப்பூவுலகில் மனிதனைப் படைத்து அவனுக்கு இரண்டு விதமான வழிகளை காட்டியிருக்கின்றான்.
அவைகள்; நன்மையான வழிகள் மற்றும் தீமையான வழிகள்.
நன்மையான காரியங்களை ஒரு மனிதன் செய்கின்ற போது அதற்குரிய கூலியை அல்லாஹ்விடம் பெற்றுக் கொள்கின்றான். அதுபோல் அதற்கு மாற்றமாக தீமையான காரியங்களை ஒரு மனிதன் செய்யும் போது அல்லாஹ்வின் தண்டனைக்கு உரித்தானவனாக மாறுகின்றான். இந்த அடிப்படையில் அனைத்து மனிதர்களையும் அல்லாஹ்வுக்கு கட்டுப்பட்டு அவனை மட்டுமே வணங்க வேண்டும் என்பதனையும் அதற்காகவே மனிதர்களைப் படைத்திருக்கின்றான் என்பதாகவும் மனிதன் படைக்கப்பட்ட நோக்கத்தை அல்லாஹ் அல்-குர்ஆனில் தெளிவாக கூறியிருக்கின்றான்.
“இன்னும், ஜின்களையும், மனிதர்களையும் அவர்கள் என்னை வணங்குவதற்காகவேயன்றி நான் படைக்கவில்லை” (அல்-குர்ஆன் 51:56)
மனிதன் படைக்கப்பட்ட நோக்கமே அல்லாஹ்வை வணங்குவதற்காகத்தான் என்றால் மனிதனின் செயல்கள் எப்பொழுது முதல் அல்லாஹ்வால் ஏற்றுக்கொள்ளப்படுகின்றன என்பதனை ஒரு இறை விசுவாசி அவசியம் அறிந்திருக்க வேண்டும். ஒருவன் பருவ வயதை அடைந்தது முதல் அவன் மரணிக்கும் வரைக்கும் செய்யக் கூடிய அனைத்து நற்கருமங்களும் இபாதத்தாக மாறிவிடுவதோடு அதற்கு அல்லாஹ் கூலியையும் வழங்குகின்றான்.
அல்லாஹ் கூறுகின்றான்:
“உமக்கு மரணம் வரும்வரை உமது இறைவனை வணங்குவீராக!” (அல்-குர்ஆன் 15:99)
“நம்பிக்கை கொண்டோரே! நீங்கள் அல்லாஹ்வை அஞ்ச வேண்டிய முறைப்படி அஞ்சுங்கள்; மேலும், (அல்லாஹ்வுக்கு முற்றிலும் வழிப்பட்ட) முஸ்லிம்களாக அன்றி நீங்கள் மரிக்காதீர்கள்“ (அல்-குர்ஆன் 3:102)
இவ்வாறு நற்கருமத்தை வணக்கமாக அல்லாஹ் அமைத்து வைத்தாலும் இவற்றை ஒரு அடியான் நிறைவேற்றுவதன் மூலம் இறைவனுக்கு எவ்விதப் பயனும் இல்லை. எனினும் இவ்வணக்கங்களின் மூலம் சிறந்த மனிதனாக மாறவேண்டும் என்பதற்காகவும் படைக்கப்பட்ட மனிதனுக்கு நன்மையானவை, தீமையானவை என இருவிதமான வழிகளைக் காட்டி அவனது செயற்பாடுகளை இவ்வுலகில் சோதிப்பதற்காகவும் வணக்கத்தை மனிதர்களின் மீது கடமையாக்கியிருக்கிறான்.
அல்லாஹ் கூறுகின்றான்:
“(அவனை) நீங்கள் நிராகரித்தாலும் (அவனுக்குக் குறையேதுமில்லை) – நிச்சயமாக அல்லாஹ் உங்களிடம் தேவையற்றவன்; எனினும் தன் அடியார்களின் (நன்றி மறக்கும்) நிராகரிப்பை – குஃப்ரைக் கொண்டு அவன் திருப்தி கொள்வதில்லை; நீங்கள் நன்றி செலுத்துவீர்களாயின், உங்களைப் பற்றி அவன் திருப்தி கொள்வான். அன்றியும், (தன் பாவச் சுமையைச்) சுமக்கிறவன், மற்றொருவன் (பாவச்) சுமையைச் சுமக்க மாட்டான்; பின்னர் நீங்கள் திரும்பிச் செல்லுதல் உங்களுடைய இறைவனிடமே யாகும்; நீங்கள் செய்து கொண்டிருந்தது பற்றி அப்போது அவன் உங்களுக்கு அறிவிப்பான்; நெஞ்சங்களிலிருப்பதை அவன் நிச்சயமாக நன்கறிபவன்” (அல்-குர்ஆன் 39:7)
“உங்களில் எவர் செயல்களால் மிகவும் அழகானவர் என்பதைச் சோதிப்பதற்காக அவன், மரணத்தையும் வாழ்வையும் படைத்தான்; மேலும், அவன் (யாவரையும்) மிகைத்தவன்; மிக மன்னிப்பவன்” (அல்-குர்ஆன் 67:2)
“மேலும் மூஸா (தம் சமூகத்தாரிடம்) ‘நீங்களும், பூமியிலுள்ள அனைவரும் சேர்ந்து மாறு செய்த போதிலும், (அவனுக்கு யாதொரு நஷ்டமும் ஏற்படாது;) நிச்சயமாக அல்லாஹ் தேவையற்றோனும், புகழுடையோனுமாக இருக்கின்றான்’ என்றும் கூறினார்” (அல்-குர்ஆன் 14:8)
வணக்கம் என்ற வட்டத்திற்குள் நான்கு விதமான மனிதர்கள் இருக்கின்றார்கள். இவர்கள் எந்த நோக்கத்தோடு யாருக்காக எதற்காக ஒரு செயலைச் செய்கின்றார்களோ அந்த பிரிவில் உள்ளடங்குவதோடு அந்தப் பெயருக்கு உரித்தானவராக மாறுகிறார்.
முதலாம் பிரிவு: ஒரு மனிதன் அல்லாஹ்வை வணங்குவதை மறுக்கின்றான்; அவனது கடமைகளை புறக்கனிக்கின்றான்; அவ்வாறே தனக்கு கிடைத்திருக்கும் செல்வங்களெல்லாம் தாமே முயற்சித்து கிட்டியது என்று எண்ணி பெருமையடிக்கின்றான். இவன் அல்லாஹ்விடம் பெருமையடித்தவனாக, நிராகரிப்பாளனாக மாறுகின்றான். ஃபிர்அவ்னும் அவனைப் போன்றவர்களும் இப்பிரிவில் அடங்குவர்.
இரண்டாம் பிரிவு: ஒரு மனிதன் அல்லாஹ்வை வணங்குகின்றான். அல்லாஹ்வுடன் சேர்த்து வேறொன்றையும் வணங்குகின்றான். உதாரணமாக, பிரார்த்தனை என்பது வணக்கமாகும். அல்லாஹ்விடம் மாத்திரம் நேரடியாக பிரார்த்திக்க வேண்டிய அடியான் அவ்லியாக்கள் மூலம் அல்லது நபி (ஸல்) அவர்கள் மூலமாக அவர்களின் சிபாரிசுகளை வேண்டி பிரார்த்தனைய அல்லாஹ்வுக்கு மாத்திரம் செய்யாமல் அதில் இணை கற்பிக்கின்றனர். இத்தகையவர்கள் அல்லாஹ்வுக்கு இணைவைக்கின்ற கூட்டத்தில் உள்ளடங்குவார்கள்.
மூன்றாவது பிரிவு: ஒருவன் அல்லாஹ்வை வஷங்குகின்றான்; ஆனால் அவனது வணக்க வழிபாடுகள், செயல்பாடுகள் அல்லாஹ்வும் அவனது தூதரும் காட்டித் தராத முறைப்படி அமைந்திருக்கும். உதாரணமாக: நபி (ஸல்) அவர்களின் வழிமுறையில் இல்லாத ஷஃபான் மாதத்தில் பராஅத் நோன்பு நோற்பது, ரபியுல் அவ்வல் மாதத்தில் மீலாது விழா கொண்டாடுவது போன்றவற்றைக் கூறலாம். இதுபோன்று அல்-குர்ஆன், அஸ்ஸூன்னா மற்றும் ஸஹாபாக்கள் காட்டித்தராத வழிமுறைகள் அனைத்தும் இதில் உள்ளடங்கும். இதனை ‘பித்அத்’ மார்க்கத்தில் புதிதாக உருவாகியவை என்று அழைக்கப்படும்.
நான்காவது பிரிவு: அல்லாஹ்வும் அவனது தூதரும் காட்டித்தந்த முறைப்படி ஒருவன் ஏக இறைவனாகிய அல்லாஹ்வை மட்டும் வணங்குகின்றார். இவர் அல்லாஹ்வுக்கு இணை கற்பிக்காமலும், பெருமையடிக்காமலும் நூதனமான விஷயங்களான பித்அத்களை விட்டுத் தவிர்ந்தவராகவும் செயல்படுபவர் இந்த நான்காவது பிரிவைச் சேர்ந்தவராவார்.
அல்லாஹ்வும் அவனது தூதரும் காட்டித்தந்த பிரகாரம் ஒருவர் ஒரு செயலைச் செய்கின்ற போது அது வணக்கமாக மாறுகின்றது. மனிதர்களால் மாத்திரம் வணக்கத்தின் தன்மையை, முறையை அறிந்துக் கொள்ள முடியாது. அதனால் மனிதர்களைச் சீர்திருத்துவதற்காக ஒவ்வொரு காலக்கட்டத்திலும் அல்லாஹ் நபிமார்களை அனுப்பினான். அந்த அடிப்படையில் அந்த நபிமார்களும் தங்களின் சமுதாய மக்களுக்கு சிறந்த முறையில் வழிகாட்டிச் சென்றார்கள். இறுதியாக முஹம்மது நபி (ஸல்) அவர்கள் அனுப்பப்பட்டு ஒட்டுமொத்த சமுதாயத்தையும் வழிநடத்தி விட்டு, உலகம் அழியும் நாள் வரைக்கும் அவர்கள் காட்டித் தந்த பிரகாரம் செயல்படவேண்டும் என்பதனை தெளிவுபடுத்திவிட்டுச் சென்றார்கள். இந்த தூதர்கள் அனைவரும் தம்மைப் பின்பற்றி, ஏக இறைவனையே வணங்க வேண்டும் என்பதனையே போதித்தார்கள்.இந்த நோக்கத்திற்காகத் தான் அல்லாஹ் பல சமுதாய மக்களுக்கு பலவிதமான தூதர்களை அனுப்பினான்.
அல்லாஹ் கூறுகின்றான்:
“(நபியே!) உமக்கு முன்னர் நாம் அனுப்பிய ஒவ்வொரு தூதரிடமும்: ‘நிச்சயமாக (வணக்கத்திற்குரிய) நாயன் என்னைத் தவிர வேறு எவருமில்லை; எனவே, என்னையே நீங்கள் வணங்குங்கள்’ என்று நாம் வஹீ அறிவிக்காமலில்லை” (அல்-குர்ஆன் 21:25)
“இன்னும், ஆது கூட்டத்தாரிடம் அவர்களுடைய சகோதரர் ஹூதை (நபியாக அனுப்பி வைத்தோம்;) அவர், ‘என் சமூகத்தாரே! நீங்கள் அல்லாஹ்வையே வணங்குங்கள்; அவனையன்றி உங்களுக்கு வேறு நாயனில்லை – நீங்கள் (அவனுக்கு) அஞ்சி(ப் பேணி) நடக்க வேண்டாமா?’ என்று கேட்டார்” (அல்-குர்ஆன் 7:65)
“ஸமூது’ கூட்டத்தாரிடம், அவர்கள் சகோதரராகிய ஸாலிஹை (நம் தூதராக அனுப்பி வைத்தோம்); அவர் (அவர்களை நோக்கி) ‘என் சமூகத்தார்களே! அல்லாஹ்வையே வணங்குங்கள்; அவனன்றி உங்களுக்கு வேறு நாயனில்லை“ (அல்-குர்ஆன் 7:73)
“மத்யன் நகரவாசிகளிடம் அவர்களுடைய சகோதரராகிய ஷுஐபை (நம் தூதராக அனுப்பிவைத்தோம்); அவர் (தம் கூட்டத்தாரை நோக்கி,) ‘என் சமூகத்தார்களே! அல்லாஹ்வையே வணங்குங்கள்; அவனன்றி உங்களுக்கு வேறு நாயனில்லை“ (அல்-குர்ஆன் 7:85)
“(நபியே!) நீர் கூறுவீராக: ‘எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே உரியது; இன்னும் அவன் தேர்ந்தெடுத்துக் கொண்ட அவனுடைய அடியார்கள் மீது ஸலாம் உண்டாவதாக! அல்லாஹ் மேலானவனா? அல்லது அவர்கள் (அவனுக்கு) இணையாக்குபவை (மேலானவை)யா?” (அல்-குர்ஆன் 27:59)
“(குஃப்ரை விட்டும்) தூயவர்களாக இருக்கும் நிலையில் மலக்குகள் எவருடைய உயிர்களைக் கைப்பற்றுகிறார்களோ அவர்களிடம்: ‘ஸலாமுன் அலைக்கும்’ (‘உங்கள் மீது சாந்தி உண்டாவதாக)¢ நீங்கள் செய்து கொண்டிருந்த (நற்)கருமங்களுக்காக சுவனபதியில் நுழையுங்கள்’ என்று அம்மலக்குகள் சொல்வார்கள்” (அல்-குர்ஆன் 16:32)
வணக்க வழிபாடுகளை மேற்கொள்கின்ற போது கடைபிடிக்கவவுண்டிய சில ஒழுங்குமுறைகள்:
1) பகுத்தறிவை நுழைக்கக் கூடாது:
அல்லாஹ்வினால் மார்க்கமாக்கப்பட்ட விஷயங்களை அப்படியே எடுத்து நடக்க வேண்டும். அவற்றில் நமது பகுத்தறிவை நுழைக்கக் கூடாது. இதனையே அல்லாஹ் பின்வருமாறு கூறுகின்றான்:
“நீரும் உம்மோடு திருந்தியவரும் ஏவப்பட்டவாறே உறுதியாக இருப்பீர்களாக; வரம்பு மீறி விடாதீர்கள். நிச்சயமாக அவன் நீங்கள் செய்வதை கவனித்தவனாக இருக்கின்றான்” (அல்-குர்ஆன் 11:112)
“இதன் பின்னர் உம்மை ஷரீஅத்தில் (மார்க்கத்தில்) ஒரு நேரான வழியில் நாம் ஆக்கியுள்ளோம். ஆகவே நீர் அதனையே பின்பற்றுவீராக; அன்றியும், அறியாமல் இருக்கின்றார்களே அவர்களின் விருப்பங்களைப் பின்பற்றாதீர்” (அல்-குர்ஆன் 45:18)
மேலும் ஹஜருல் அஸ்வத் -தை முத்தமிடுவதை உதாரணமாகக் கூறலாம்.
2) வணக்க வழிபாடுகளில் இணைகற்பிக்க கூடாது:
வணக்கத்தை மேற்கொள்கின்ற போது இறைவனுக்கு இணை கற்பித்தலை விட்டும் தவிர்ந்துக் கொள்ளவேண்டும். அல்லாஹ் கூறுகின்றான்:
“(நபியே!) நீர் சொல்வீராக: ‘நிச்சயமாக நான் உங்களைப் போன்ற ஒரு மனிதனே! நிச்சயமாக உங்களுடைய நாயன் ஒரே நாயன்தான் என்று எனக்கு வஹீ அறிவிக்கப்பட்டிருக்கிறது; எவன் தன்னுடைய இறைவனைச் சந்திக்கலாமென ஆதரவு வைக்கின்றானோ அவன் (ஸாலிஹான) நல்ல செயல்களைச் செய்து, தன் இறைவனை வணங்குவதில் வேறெவரையும் இணையாக்காதும் இருப்பானாக” (அல்-குர்ஆன் 18:110)
இறைவனுக்கு இணைக் கற்பிக்கலாகாது எனும் இறைக்கட்டளைகளை மீறி ஒருவன் இணை கற்பித்தால் அல்லாஹ் அவனுடைய வணக்கங்களை ஏற்றுக்கொள்ளாததோடு அவற்றை அழித்தும் விடுகின்றான்:
“இதுவே அல்லாஹ்வின் நேர் வழியாகும், தன் அடியார்களில் அவன் யாரை விரும்புகிறானோ, அவர்களுக்கு இதன்மூலம் நேர்வழி காட்டுகிறான்; (பின்னர்) அவர்கள் இணைவைப்பார்களானால், அவர்கள் செய்து வந்ததெல்லாம், அவர்களை விட்டு அழிந்துவிடும்“ (அல்-குர்ஆன் 6:88)
“அன்றியும், உமக்கும், உமக்கு முன் இருந்தவர்களுக்கும், வஹீ மூலம் நிச்சயமாக அறிவிக்கப்பட்டது என்னவென்றால், ‘நீவிர் (இறைவனுக்கு) இணை வைத்தால், உம் நன்மைகள் (யாவும்) அழிந்து, நஷ்டமடைபவர்களாகி விடுவீர்கள்’ (என்பதுவேயாகும்). ஆகவே, நீர் அல்லாஹ்வையே வணங்குவீராக! மேலும், அவனுக்கு நன்றி செலுத்துபவர்களில் நின்றும் இருப்பீராக!” (அல்-குர்ஆன் 39:65-66)
3) நபி (ஸல்) அவர்களின் வழிமுறையைப் பின்பற்றவேண்டும்:
ஒருவர், தாம் செய்கின்ற வணக்கங்களுக்கு முன்மாதிரியாக நபி (ஸல்) அவர்களின் வழிமுறையையே எடுத்துக் கொள்ள வேண்டும். நபி (ஸல்) அவர்களின் வழிமுறையில் இல்லாத புதிய வழிமுறையில் ஒருவன் வணக்கம் புரிவராரென்றால் அது ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.
“என்னை எவ்வாறு தொழக் கண்டீர்களோ அவ்வறே தொழுது கொள்ளுங்கள்” (புகாரி, முஸ்லிம்)
“நமது அனுமதியில்லாமல் ஓர் அமலை எவரேனும் செய்தால் அது நிராகரிக்கப்படும” அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி), ஆதாரம் :புகாரி, முஸ்லிம்.
4) குறிப்பிட்ட காலங்களில், நேரங்களில் நிறைவேற்ற வேண்டும்:
சில வணக்கங்களைப் பொறுத்தவரையில் அவைகள் கால வரையரைக்குட்பட்டதாக இருக்கும். அவற்றை அந்தந்த காலங்களில், நேரங்களில் நிறைவேற்ற வேண்டும். உதாரணமாக: ஐந்து நேரத் தொழுகைகளை அந்தந்த நேரங்களில் தொழவேண்டும்; ஃபர்லான நோன்பை ரமலான் மாதத்தில் நோற்க வேண்டும்; ஹஜ்ஜூடைய மாதத்தில் ஹஜ்ஜின் கிரியைகளை செய்ய வேண்டும். இவைகளை கால தாமதமாகவோ அல்லது வேறு நேரங்களிலோ நிறைவேற்றினால் அவைகள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.
அல்லாஹ் கூறுகின்றான்:
“நிச்சயமாக குறிப்பிட்ட நேரங்களில் தொழுகையை நிறைவேற்றுவது முஃமின்களுக்கு விதியாக்கப் பெற்றுள்ளது” (அல்-குர்ஆன் 4:103)
“ரமளான் மாதம் எத்தகையதென்றால் அதில் தான் மனிதர்களுக்கு (முழுமையான வழிகாட்டியாகவும், தெளிவான சான்றுகளைக் கொண்டதாகவும், (நன்மை – தீமைகளைப்) பிரித்தறிவிப்பதுமான அல் குர்ஆன் இறக்கியருளப் பெற்றது; ஆகவே, உங்களில் எவர் அம்மாதத்தை அடைகிறாரோ, அவர் அம்மாதம் நோன்பு நோற்க வேண்டும்“ (அல்-குர்ஆன் 2:185)
“(ஹஜ்ஜின் போது) உங்கள் இறைவனுடைய அருளை நாடுதல்(அதாவது வியாபாரம் போன்றவற்றின் மூலமாக நேர்மையான பலன்களை அடைதல்) உங்கள் மீது குற்றமாகாது; பின்னர் அரஃபாத்திலிருந்து திரும்பும்போது ‘மஷ்அருள் ஹராம்’ என்னும் தலத்தில் அல்லாஹ்வை திக்ரு(தியானம்)செய்யுங்கள்; உங்களுக்கு அவன் நேர்வழி காட்டியது போல் அவனை நீங்கள் திக்ரு செய்யுங்கள். நிச்சயமாக நீங்கள் இதற்கு முன் வழிதவறியவர்களில் இருந்தீர்கள்” (அல்-குர்ஆன் 2:198)
5) மரணம் வரும் வரைக்கும் இறைவனை வணங்க வேண்டும்:
ஒரு அடியான் பருவ வயதை அடைவது முதல் மரணிக்கும் வரை செய்யக் கூடிய அனைத்து விஷயங்களுமே வணக்கமாகும். அதாவது ஒருவன் இறைவனின் ஏவல் விலக்கல்களுக்கு முற்றிலும் கட்டுப்பட்டு வாழ்வானாயின் அதுவே வணக்கமாகும். இவ்வாறு ஒருவன் தான் மரணிக்கின்ற வரைக்கும் இறை ஆணைக்கு வழிபட்டு நடக்க வேண்டும்.
“உமக்கு மரணம் வரும்வரை உமது இறைவனை வணங்குவீராக!” (அல்-குர்ஆன் 15:99)
“நம்பிக்கை கொண்டோரே! நீங்கள் அல்லாஹ்வை அஞ்ச வேண்டிய முறைப்படி அஞ்சுங்கள்; மேலும், (அல்லாஹ்வுக்கு முற்றிலும் வழிப்பட்ட) முஸ்லிம்களாக அன்றி நீங்கள் மரிக்காதீர்கள்“ (அல்-குர்ஆன் 3:102)
அல்லாஹ் விரும்பக்கூடிய, அவனது பொருத்தத்திற்குரிய, பகிரங்கமாகவும், அந்தரங்கமாகவும் செய்யக் கூடிய செயல்ககள் மற்றும் கூறக் கூடிய வார்த்தைகள் அனைத்துமே இபாதத் (வணக்க வழிபாடுகள்) ஆகும். வணக்க வழிபாடுகளை மூன்று வகைப்படுத்தலாம். அவைகள்:
1) உள்ளத்தால் நிறைவேற்றக்கூடிய வணக்கம்:
இறைவனைப் பற்றிய உள்ளச்சம் கொள்ளுதல், அல்லாஹ்வின் மீதே பூரண நம்பிக்கை வைத்தல், அவன் மீதே ஆதரவு வைத்தல், அவன் பால் ஆசை வைத்தல், அல்லாஹ்விடமே பொறுப்புச் சாட்டுதல், அவனையே அச்சம் கொள்ளுதல் இவை போன்ற வணக்கங்கள் இந்த வகையில் உள்ளடங்கும்.
2) நாவால் நிறைவேற்றப்படும் வணக்கம்:
அல்-குர்ஆன் ஓதுதல், அல்லாஹ்வை நினைவு கூறுதல் (திக்ரு செய்தல்), அல்லாஹ்வை தஸ்பீஹ் (துதி) செய்தல், அல்லாஹ்வை புகழ்தல் (தஹ்மீஹ்), அல்லாஹ்விடம் பிரார்த்தித்தல், அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்துதல் இவை போன்ற வணக்கங்கள் இந்த வகையில் அடங்குகின்றன.
3) உடலால் நிறைவேற்றப்படும் வணக்கம்:
தொழுகை, நோன்பு, ஸக்காத், ஹஜ், அல்லாஹ்வின் பாதையில் போர் புரிதல் போன்ற வணக்கங்கள் உடலாலும் உள்ளத்தாலும் நிறைவேற்றப்பட வேண்டியவையாகும்.
வணக்க வழிபாடுகளில் முதன்மையானவைகள் தொழுகை, ஸக்காத், நோன்பு, ஹஜ் போன்ற இஸ்லாத்தின் அடிப்படை வணக்கங்களாகும். அத்துடன் ஏனைய மனிதர்களிடம் பண்போடு நடந்துக் கொள்வது, உண்மை உரைத்தல், நன்மையை ஏவுதல், தீமையைத் தடுத்தல், அனாதைகளைப் பராமரித்தல், ஸதகா கொடுத்தல், அண்டை வீட்டாருடன் சிறந்த முறையில் நடந்துக் கொள்ளுதல், அல்லாஹ்வுக்காக பொறுமையைக் கடைபிடித்தல், பெற்றோருடன் நல்ல முறையில் நடந்துக் கொள்ளுதல் என்று பிற வணக்க வழிபாடுகளின் நீண்டுக் கொண்டே செல்கின்றன.
அல்லாஹ்வும் அவனது திருத்தூதர் முஹம்மது (ஸல்) அவர்களும் காட்டித்தந்த முறைப்படி ஏக இறைவனாகிய அல்லாஹ்வை வணங்குவதற்கு அல்லாஹ் அருள்புரிவானாகவும். ஆமீன்.