அகிலங்களின் இறைவனாகிய அல்லாஹ்வுக்கே அனைத்துப் புகழும் உரித்தானது.
நபி (ஸல்) அவர்கள் கூறியிருக்கிறார்கள்:
‘பட்டும் தங்கமும் என் சமுதாயத்தில் பெண்களுக்கு ஆகுமாக்கப்பட்டுள்ளன. ஆண்களுக்கு தடை செய்யப்பட்டுள்ளன’ அறிவிப்பவர்: அபூமூஸா (ரலி), நூல்: அஹ்மத்.
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: ‘ஒரு மனிதரின் கையில் தங்க மோதிரத்தைக் கண்ட நபி (ஸல்) அவர்கள் அதைக் கழற்றி எறிந்து விட்டு, உங்களில் யாரேனும் தீக்கங்கை எடுத்து அதைத் தனது கையில் வளையமாக அணிவதை விரும்புவாரா? என்று கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள் சென்ற பிறகு, ‘அந்த மோதிரத்தை எடுத்து வேறு வழியில் பயன்படுத்திக் கொள்’ என்று அந்த மனிதரிடம் சொல்லப்பட்டது. அதற்கவர், அல்லாஹ்வின் தூதர் அவர்கள் அதைத் தூர எறிந்திருக்க அல்லாஹ்வின் மீது ஆணையாக ஒருபோதும் அதை நான் எடுக்க மாட்டேன் எனக் கூறினார்’ (முஸ்லிம்)
சகோதர, சகோதரிகளே!
நாம் மேற்கண்ட நபிமொழிகளில் அடங்கியுள்ள எச்சரிக்கைகளை மிகவும் கவனமுடன் படிக்க வேண்டும். நாம் நமது ஊரின் பாரம்பரியம் என்ற பெயரில் செய்கின்ற செயல்களை சற்று உற்று நோக்கவேண்டும். புது மணமகனை தங்க மோதிரம் மற்றும் பட்டுத் துணி போர்த்தி வரவேற்பது, பிறந்த ஆண் குழந்தைகளுக்கு அன்பளிப்பாகவோ அல்லது நாமாகவோ செய்த தங்கத்திலான நகைகளை அணிவிப்பது ஆகிய செயல்கள் மேற்கண்ட நபிமொழிகளில் அடங்கிய கடுமையான எச்சரிக்கைகளை எந்தளவுக்கு மீறியது என்பதை சற்று நடுநிலையுடன் சிந்திக்க வேண்டும்.
அல்லாஹ் நம் அனைவருக்கும் அவனுடைய நேர்வழி என்னும் ஹிதாயத்தைத் தந்து அவனுடைய திருத்தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் காட்டித்தந்த நெறிமுறைப்படி வாழ அருள்புரிவானாகவும்.