உண்மை முஸ்லிம் நயவஞ்சகம், ஏமாற்றுதல், வஞ்சப் புகழ்ச்சி போன்ற தன்மைகளை விட்டும் விலகியிருப்பார். அவரது மார்க்க போதனை இத்தகைய ஆபத்திலிருந்து அவரைப் பாதுகாக்கும்!
நபி (ஸல்) அவர்கள்,
“ஒருவரின் முன்னிலையில் அவரைப் புகழ்வது அழிவை ஏற்படுத்தும்” என்று கூறினார்கள்.
ஏனெனில் அவ்வாறு தன்னை புகழ்வதைக் கேட்கும்போது மனித மனம் அதை மிகவும் விரும்பும். அதைக் கேட்பவர் அகந்தையும், ஆணவமும் கொள்வார்!
புகழ்பாடுவது, புகழ்பவனை நயவஞ்சகத் தன்மையை நோக்கி இழுத்துச் சென்றுவிடும்.
அவ்வாறே புகழப்படுபவனை பெருமைக்கு ஆளாக்கிவிடும் என்பதால்தான் நபி (ஸல்) அவர்கள் தங்களது தோழர்கள் மனிதர்களின் முகத்துக்கு எதிரே புகழ்வதை தடுப்பவர்களாக இருந்தார்கள்.
புகழ்பவர்களில் சிலர் ஏமாற்றுபவர்களாகவும், பொய்யர்களாகவும், நயவஞ்சகர்களாகவும் இருப்பதால் மீண்டும் மீண்டும் புகழும்போது புகழைக் கேட்பவர்கள் அதில் இன்பமடைய ஆரம்பித்து விடுகிறார்கள்.
அதற்குப் பின் அவர்கள் வரம்பு மீறிய புகழைத் தவிர அறிவுரையையும், விமர்சனத்தையும் விரும்பமாட்டார்கள்.
ஒரு மனிதர் ஆட்சியாளர்களில் ஒருவரைப் பற்றி புகழ்ந்து பேசியபோது மிக்தாத் (ரழி) அவர்கள் அம்மனிதரின் முகத்தை நோக்கி மண்ணை அள்ளி வீசிவிட்டுக் கூறினார்கள்:
“அதிகமதிகம் புகழ்பவர்களை நீங்கள் கண்டால் அவர்களது முகத்தில் மண்ணை எடுத்து வீசுங்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.”
(ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)