கட்டுரை ஆசிரியர் : மஸ்தூக்கா
அண்ணல் நபி (ஸல்) அவர்களின் புகழ் பாடுவதாகக் கூறி ரபீவுல் அவ்வல் மாதம் முழுவதும் தங்கள் பிழைப்பை படுஜோராக நடத்தியவர்கள், அடுத்த ரபீவுல் ஆகிர் மாதத்திற்கான பிழைப்புக்கு அப்துல் காதிர் ஜீலானி (ரஹ்) அவர்களைப் பகடைக் காயாகப் பயன் படுத்திக் கொண்டார்கள்.அடுத்தடுத்த மாதத்திற்கான வருமானத்துக்குரிய அவ்லியாக்களின் பட்டியல் இன்னும் தயாராக வில்லை போலும்!
கொஞ்சம் கூட உண்மை கலக்காமல்- முழுக்க முழுக்க கற்பனைக் கதைகளால் ஹிகாயத் என்னும் சம்பவங்களை உருவாக்கி அல்லாஹ்வுக்கு இணை கற்பிக்கும் அப்பட்டமான ஷிர்க்கை எதுகை மோனையுடன் கவிதைகளாகப் புனைந்து, அதற்கு முஹ்யித்தீன் மவ்லிது என்று பெயர் சூட்டி – அல்லாஹ்வை மட்டுமே அழைத்துப் பிரார்த்திக்க கட்டப்பட்ட பள்ளிவாசல்களில் ஓதுவது எவ்வளவு பெரிய பாவம் என்பதை உணரவில்லை.
அரபியில் இருப்பதால் உங்களுக்கு அர்த்தம் புரிய வில்லை. அதன் பொருளை உணர்ந்தால் துடிதுடித்துப் போவீர்கள். அந்த அளவுக்கு முஹ்யித்தீன் மவ்லிதின் படல்கள் முழுவதும், அண்ணல் நபி (ஸல்) அவர்களை விடவும் அப்துல் காதிர் ஜீலானி (ரஹ்) அவர்கள் அதிக சிறப்புக்கு உரியவராகவும், அல்லாஹ்வுக்குச் சமமான ஆற்றல் படைத்தராகவும் வர்ணிக்கப் படுகிறார்கள்.
அல்லாஹ்வால் அறவே மன்னிக்கப் படாத – ஷிர்க் என்னும் கொடும் பாவத்தை ஏற்படுத்தும் – இந்த முஹ்யித்தீன் மவ்லிது நன்மையைத் தருவதற்குப் பதிலாக நரகப் படு குழியில் கொண்டு போய் சேர்க்கும் என்பதை மறந்து விடாதீர்கள். எச்சிக்கை! நிச்சயமாக அல்லாஹ் தனக்கு இணை வைப்பதை மன்னிக்கவே மாட்டான். (அல் குர்ஆன் 4: 48)