இஷாத் தொழுகையினது பின் சுன்னத்திலிருந்து சுபஹுடைய அதான் வரையிலான இரவு வேளையில் தொழப்படும் சுன்னத்தான தொழுகைக்கு இரவுத் தொழுகை என்று கூறப்படும். அறபியில் இதற்கு ‘கியாமுல் லைல்’ என்று கூறுவர். ரமழான் மாதத்தில் மட்டுமல்லாது ஏனைய காலங்களிலும் இந்த இரவுத் தொழுகைக்குத் தனியான சிறப்பம்சங்கள் இருக்கின்றன. ஆன்மீக முன்னேற்றத்தில் இரவுத் தொழுகையின் பங்கு முக்கியமானதாகும்.
இரவு நேரத்தில் தமது படுக்கையை விட்டும் எழுந்து தொழும் நல்லடியார்கள் பற்றிப் பின்வரும் வசனம் இவ்வாறு சிறப்பித்துப் பேசுகின்றது.
‘அவர்களது விலாப்புறங்கள் படுக்கைகளை விட்டும் விலகியிருக்க, அவர்கள் தமது இரட்சகனை அச்சத்துடனும், ஆதரவுடனும் பிரார்த்திப்பார்கள். மேலும், நாம் அவர்களுக்கு வழங்கியவற்றிலிருந்து (நல்லறங்களில்) செலவும் செய்வார்கள்.’
‘எனவே, அவர்கள் செய்துகொண்டிருந்தவற்றிற்குக் கூலியாக அவர்களுக்கு மறைத்து வைக்கப்பட்டிருக்கும் கண் குளிர்ச்சியை எந்த ஆன்மாவும் அறிந்து கொள்ளாது.’ (32:16-17)
‘நீங்கள் ஸலாத்தைப் பரப்புங்கள்; உணவளியுங்கள்; மக்கள் தூங்கும் போது தொழுங்கள்; சங்கடம் இல்லாமல் சுவனம் நுழைவீர்கள்! என நபி(ச) அவர்கள் கூறியுள்ளார்கள்.’ அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு ஸலாம், ஆதாரம்: திர்மிதி (2485), இப்னுமாஜா (1334)
இந்த ஹதீஸின் மூலம் இரவுத் தொழுகை சுவனம் செல்வதற்கான இலகுவான வழிகளில் ஒன்று என்பது உணர்த்தப்படுகின்றது.
‘இபாதுர் ரஹ்மான்கள்’ பற்றி அல்குர்ஆன் கூறும் போதும் இரவுத் தொழுகை அவர்களின் அடையாளங்களில் ஒன்று என்று கூறுகின்றது.
மேலும், அவர்கள் தமது இரட்சகனுக்கு சுஜூது செய்தவர்களாகவும், நின்றவர்களாகவும் இரவைக் கழிப்பார்கள்.’ (25:64)
‘நபி(ச) அவர்கள் இரவுத் தொழுகையில் அதிக நாட்;டம் கொண்டவர்களாக இருந்தார்கள். அவர்கள் தமது கால் பாதங்கள் வீங்கும் அளவுக்கு நின்று வணங்குவார்கள். உங்களுடைய முன்-பின் பாவங்கள் மன்னிக்கப்பட்டுவிட்டதல்லவா? எனக் கேட்டால் ‘நான் நன்றியுடைய அடியானாக இருக்கக் கூடாதா? என்று கேட்பவர்களாக இருந்தார்கள்’ (புஹாரி: 1130, 4836, 6471, முஸ்லிம்:7302,7303)
பொதுவாக இரவுத் தொழுகை சிறப்பானது என்றாலும் ரமழான் காலங்களில் இரவுத் தொழுகை இன்னும் அதிக சிறப்பைப் பெறுகின்றது.
‘நம்பிக்கை கொண்டு (நற்கூலியை) எதிர்பார்த்து ரமழான் மாதத்தில் நின்று வணங்கு பவரின் முன்னைய பாவங்கள் அனைத்தும் மன்னிக்கப்பட்டுவிடும் என நபி(ச) அவர்கள் கூறினார்கள்.’ (அறிவிப்பவர்: அபூஹுரைரா(வ), ஆதாரம்: புஹாரி – 37)
எனவே, ஏனைய காலங்களை விட ரமழான் காலத்தில் இரவுத் தொழுகை முக்கியத்துவம் பெறுகின்றது. நபி(ச) அவர்களது காலத்தில் தொடராக ரமழான் இரவுத் தொழுகை ஜமாஅத்தாகத் தொழப்படவில்லை.
நபியவர்களும் ஜமாஅத்துத் தொழுகையும்:
ஆயிஷா(ரலி) கூறினார்கள்; ‘நபி(ச) அவர்கள் நள்ளிரவில் (வீட்டைவிட்டுப்) புறப்பட்டுப் பள்ளியில் தொழுதார்கள். சிலர் அவர்களின் தொழுகையைப் பின்பற்றித் தொழலானார்கள். காலையில் மக்கள் இது பற்றிப் பேசலானார்கள். (மறுநாள்) அதை விட அதிகமானவர்கள் திரண்டு நபி(ச) அவர்களுடன் தொழுதனர். காலையில் இது பற்றி மக்கள் தங்களுக்குள் பேசிக் கொண்டனர். மூன்றாம் இரவில் பள்ளியில் மக்கள் மேலும் அதிகமானார்கள். நபி(ச) அவர்கள் (பள்ளிக்கு) வந்ததும் மக்கள் அவர்களைப் பின்பற்றித் தொழலானர்கள். நான்காம் இரவு வந்தபோது மக்கள் அதிகரித்ததால் பள்ளி இடம் கொள்ளவில்லை. நபி(ச) அவர்கள் ஸுப்ஹுத் தொழுகைக்குத்தான் வந்தார்கள். ஃபஜ்ருத் தொழுகையை முடித்த பின் மக்களை நோக்கி இறைவனைப் புகழ்ந்து ‘அம்மா பஃது’ எனக் கூறிவிட்டு நீங்கள் வந்திருந்தது எனக்குத் தெரியாமல் இல்லை. எனினும், இரவுத் தொழுகை கடமையாக்கப்பட்டு அதை உங்களால் நிறைவேற்ற இயலாது போய் விடுமோ என்று அஞ்சினேன். (இதனால்தான் இரவு நான் வரவில்லை) என்று கூறினார்கள்.’ (புஹாரி: 924)
‘இந்த இடத்தில் இது ரமழான் மாதத்தில் இடம் பெற்றது என்பது தெளிவாக இடம் பெறா விட்டாலும் மற்றும் சில அறிவிப்புக்களில், “நாம் ஸஹர் சாப்பிட முடியாமல் போய்விடுமோ எனப் பயந்தோம். அவ்வளவு நீளமாகத் தொழுதார்கள் என்பது இடம் பெற்றுள்ளது.’ (புஹாரி: 924, இப்னு குஸைமா: 2048, இப்னு மாஜா: 1323)
எனவே, நபி(ச) அவர்களது காலத்தில் சில நாட்கள் மட்டும் ரமழான் இரவுத் தொழுகை ஜமாஅத்தாகத் தொழப்பட்டுள்ளது என்பதை அறியலாம்.
உமர்(வ) அவர்களின் ஏற்பாடு:
பின்னர் நபி(ச) அவர்களது காலத்திலும் அபூபக்கர்(வ) அவர்களது காலத்திலும் மக்கள் தனித்தனியாகவே ரமழான் இரவுத் தொழுகையைத் தொழுது வந்தார்கள். உமர்(வ) அவர்களின் காலத்தில் சிலர் தனியாகவும், சிலர் சிறு சிறு குழுக்களாகவும் தொழுது வந்தார்கள். இந்த நிலையை மாற்றி அனைவரும் ஒரு இமாமின் கீழ் தொழும் நிலையை உமர்(வ) அவர்கள் ஏற்படுத்தினார்கள்.
அப்துர் ரஹ்மான் இப்னு அப்துல் காதிர்(வ) அவர்கள் கூறுகின்றார்கள்.
‘உமர்(வ) அவர்களுடன் ரமழான் மாதம் ஒரு இரவில் பள்ளிக்குச் சென்றேன். அங்கே மக்கள் பல குழுக்களாக இருந்தார்கள். சிலர் தனித்தனியாகத் தொழுதனர். மற்றும் சிலர் ஒரு இமாமைப் பின்பற்றித் தொழுதனர். அப்போது உமர்(வ) அவர்கள், இவர்கள் அனைவரையும் ஒரு இமாமின் கீழ் திரட்டினால் அது சிறப்பாக அமையுமே என்று கூறிவிட்டு அந்த முடிவுக்கு உறுதியாக வந்து மக்களை உபைஃ இப்னு கஃப்(வ) அவர்களின் பின்னால் திரட்டினார்கள். பின்னர் மற்றொரு இரவில் அவர்களுடன் பள்ளிக்குச் சென்றேன். மக்களெல்லாம் தமது இமாமைப் பின்பற்றி தொழுது கொண்டிருந்தார்கள். அப்போது உமர்(வ) அவர்கள் ‘இந்த புதிய ஏற்பாடு நன்றாக இருக்கிறது. இப்போது (இரவின் முற்பகுதியில்) நின்று வணங்குவதை விட உறங்கிவிட்டுப் பின்னர் (இரவின் பிற்பகுதியில்) தொழுவது சிறந்ததாகும் என்று கூறினார்கள். மக்கள் இரவின் முற்பகுதியில் தொழுது வந்தனர். இரவின் கடைசி நேரத்தில் தொழுவதைக் குறித்தே இவ்வாறு உமர்(வ) அவர்கள் கூறினார்கள்.’ (புஹாரி: 2010)
உமர்(வ) அவர்களது இந்த ஏற்பாட்டின் அடிப்படையில் இன்றுவரை தொடர்ச்சியாக ரமழான் இரவுத் தொழுகை ஜமாஅத்தாக நடைபெற்று வருகின்றது.
நபிவழிக்கு மாற்றமா?
ரமழான் இரவுத் தொழுகையை ஜமாஅத்தாகத் தொழுவதை ஷிஆக்கள் போன்ற வழிகேடர்கள் உமர்(வ) அவர்கள் செய்த பித்அத்தாக விமர்சித்து வருகின்றனர். இது தவறாகும். நபி(ச) அவர்கள் ரமழான் இரவுத் தொழுகையை மூன்று இரவுகள் ஜமாஅத்தாகத் தொழுது ஜமாஅத்தாகத் தொழுவதற்கான அனுமதியை அளித்து விட்டார்கள்.
தொடர்ச்சியாக ஜமாஅத்தாகத் தொழுதால் அது கடமையாக்கப்பட்டு அதனால் தனது உம்மத்து சிரமப்படும் என்பதால்தான் ஜமாஅத்தாகத் தொழுவதைத் தவிர்த்தார்கள். நபி(ச) அவர்கள் ரமழானின் இரவுத் தொழுகையை ஜமாஅத்தாகத் தொழுவதை விட்டதற்கான காரணம் களைந்துவிட்டதால் அதன் பின் ஜமாஅத்தாகத் தொழுவதை விடவேண்டிய தேவை இல்லாமல் போய் விட்டது. ஏனெனில் நபியின் மரணத்தின் பின்னர் எதுவும் புதிதாக கடமைப்படுத்தப்படவில்லை. அடுத்து உமர்(வ) அவர்களது காலத்திலும் சிலர் ஒழுங்கில்லாமல் ஜமாஅத்தாகத் தொழுது வந்தனர். உமர்(வ) அவர்கள் பிரிந்து, பிரிந்து தொழுத மக்களை ஒரு இமாமின் கீழ் ஒன்று திரட்டினார்கள்.
கட்டாயமில்லை:
இந்த அடிப்படையில் ரமழான் இரவுத் தொழுகையைத் தொடராக ஜமாஅத்தாகத் தொழுது வருவது அங்கீகரிக்கப்பட்ட ஒரு நடைமுறையாகும். ஆனால், இரவுத் தொழுகையைக் கட்டாயம் ஜமாஅத்துடன் சேர்ந்துதான் தொழ வேண்டும் என்பதற்கில்லை.
குர்ஆன் மனனமுள்ளவர்கள் தனித்தும், முறையாகத் தொழும் பக்குவமுள்ளவர்கள் பின்னிரவில் தொழுவதும் வரவேற்கத்தக்கது. அதிகமாக ஓத முடியாதவர்களும், தனித்துவிட்டால் தொழுகை தவறிவிடும் என்ற நிலையில் இருப்பவர்களும் ஜமாஅத்தைப் பேணுவது நல்லதாகும்.
ரக்அத்துக்களின் எண்ணிக்கை:
கியாமுல் லைல் தொழுகையில் ரக்அத்துக்களின் எண்ணிக்கை குறித்து கருத்து வேறுபாடுகள் நிலவுகின்றன. அவற்றில் மிகத் தெளிவானதும், உறுதியானதும், சந்தேகங்களுக்கு அப்பாற்பட்டதாகவும் 11 ரக்அத்துக்கள் என்று கூறும் அறிவிப்புக்கள் திகழ்கின்றன.
‘ரமழானில் நபி(ச) அவர்களது தொழுகை எவ்வாறு இருந்தது என நான் ஆயிஷா(ரழி) அவர்களிடம் கேட்டேன். அதற்கவர்கள், ரமழானிலும் ரமழான் அல்லாத மாதங்களிலும் 11 ரக்அத்துக்களை விட அதிகமாக நபியவர்கள் தொழமாட்டார்கள்….. என்று கூறினார்கள்.’ அறிவிப்பவர்: அபூஸலமா இப்னு அப்துர் ரஹ்மான், ஆதாரம்: புஹாரி – 2013
நபி(ச) அவர்கள் ரமழானிலோ அதல்லாத ஏனைய காலங்களிலோ 11 ரக்அத்துக்களை விட அதிகமாகத் தொழுததில்லை என இந்த ஹதீஸ் கூறுவதால் 11 ரக்அத்துக்களுடன் நிறுத்திக் கொள்வதே ஏற்றமானதாகும்.
நபி(ச) அவர்கள் மற்றும் உமர்(வ) அவர்களும் 20 ரக்அத்துக்கள் தொழுததாக பல அறிவிப்புக்கள் வந்தாலும் அவை பலவீனமானவையாக உள்ளன என்பது கவனிக்கத்தக்கவையாகும்.
சிலர் உமர்(வ) அவர்களது காலத்தில் 23 ரக்அத்துக்கள் தொழுதுள்ளார்கள். எனவே, அது இஜ்மாவாக மாறிவிட்டது என்றும், நேர்வழி நடந்த கலீபாவின் வழிமுறை என்ற அடிப்படையிலும் அதைத்தான் பின்பற்ற வேண்டும் என்றும் கூறுகின்றனர். இது தவறானதாகும்.
உமர்(வ) அவர்கள் உபைஃ இப்னு கஃப், தமீமுத்தாரி ஆகிய இருவருக்கும் பதினொரு ரக்அத்துக்கள் தொழுவிக்குமாறு ஏவினார்கள் என்ற செய்தியை இமாம் ஷாபிஈ(ரஹ்) அவர்களே அறிவிக்கின்றார்கள். இந்த செய்தி ‘மஃரிபதுஸ் ஸுனன் வல் ஆதார்’ என்ற நூலில் 1366 ஆவது அறிவிப்பாக இடம் பெற்றுள்ளது. இமாம் மாலி(ரஹ்) அவர்களது முஅத்தாவில் 379, 251 ஆவது அறிவிப்பாகவும் இச்செய்தி பதியப்பட்டுள்ளது. பைஹகி (4800)
இந்த அறிவிப்புக்களின் அடிப்படையில் 11 ரக்அத்துக்கள் தொழுவது கூட நபிவழியாகவும், நல்வழி நடந்த கலீபாக்களின் வழிமுறையாகவும் மாறிவிடுகின்றது.
11 ரக்அத்துக்கள் என்ற ஹதீஸ் உறுதியாக இருந்தாலும் கடந்த கால அறிஞர்கள் 20 ரக்அத்துக்கள் தொழுவிக்கப் படுவதை பித்அத்தாகக் கருதவில்லை. சிறந்தது 11 என்று கூறுவதுடன் நிறுத்திக் கொண்டனர்.
உமர்(வ) அவர்களது காலத்தில் மக்கள் 23 ரக்அத்துக்கள் தொழுதார்கள் என்பது பற்றி இமாம் ஷாபிஈ(ரஹ்) அவர்கள் கூறும் போது
இதில் எந்த இறுக்கமும் இல்லை. இது ஒரு நபிலான தொழுகை. இதற்கான எல்லை கிடையாது. நீண்ட நேரம் நின்று தொழுது ஸஜ்தாவையும் ருகூவையும் (ரக்அத்தைக்) குறைத்தால் அதுவும் நல்லதுதான். அதுதான் எனக்கு விருப்பமானது. சுஜூதையும் ரக்அத்தையும் கூட்டினால் அதுவும் நல்லதுதான் என்று கூறுகின்றனர்.
எக்ஸ்பிரஸ் வேண்டாம்:
இன்று 23 ரக்அத்துக்களையும் 45 நிமிடங்களில் தொழுது முடிப்பதற்காக எக்ஸ்பிரஸ் வேகத்தில் தொழப்படுவதை எப்படியும் சரிகாண முடியாது. ஒழுங்காக ருகூஃ, சுஜூத் செய்யாத, அவ்ராதுகள் ஓதப்படாத இந்தத் தொழுகையின் நிலை என்ன என்பதை உலமாக்கள் சற்று சிந்திக்க வேண்டும்.
பலவீனமான 23 ஐ விட பலமான 11 சிறந்தது. ஒழுங்காக ஓதப்படாத, ருகூஃ மற்றும் சுஜூத் செய்யப்படாத 23 ரக்அத்துக்களை விட ஆற, அமர நீட்டி நிதானித்துத் தொழும் 11 ரக்அத்துக்கள் எவ்வளவோ மேலானதாகும்.
எனவே, உறுதியான சிறந்த வழிமுறைகளின் பால் அனைத்து சகோதரர்களும் வரவேண்டும் என்பதே எமது அன்பான அழைப்பாகும்….
S.H.M. இஸ்மாயில் ஸலஃபி – ஆசிரியர்: உண்மை உதயம் மாதஇதழ்
நன்றி: இஸ்லாம்கல்வி.காம்