மனிதனின் கண்ணியம், மானம் மரியாதையையும், அவனது சந்ததிகளையும் பாதுகாப்பது ஷரீஅத்தின் – இறைமார்க்கத்தின் நோக்கங்களில் ஒன்றாக இருப்பதால் இறைமார்க்கத்தில் விபச்சாரத்திற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
அல்லாஹ் கூறுகிறான்:
“மேலும் விபச்சாரத்தின் பக்கமே நெருங்காதீர்கள்! திண்ணமாக அது மானங்கெட்ட செயலாகவும், தீய வழியாகவும் இருக்கின்றது” (7:32)
இன்னும் சொல்வதானால் பெண்கள் கட்டாயம் பர்தா அணிய வேண்டும், ஆண், பெண் இருபாலாரும் தம் பார்வையைத் தாழ்த்திக் கொள்ள வேண்டும், பெண்கள் அந்நிய ஆண்களுடன் தனித்திருக்கக் கூடாது என்றெல்லாம் கட்டளை பிறப்பித்து விபச்சாரத்தின் பால் இட்டுச் செல்லக்கூடிய அனைத்து வழிகளையும் ஷரீஅத் அடைத்து விட்டது.
திருமணமானவர் (ஆணோ, பெண்ணோ) விபச்சாரம் செய்தால் கடுமையாக தண்டிக்கப்படுவார். அவருக்குரிய தண்டனை மரணிக்கும் வரை அவர் மீது கல்லெரிய வேண்டும். இது, அவர் செய்த தீய செயலின் விளைவை அவர் சுவைப்பதற்காகவும் அவருடைய உடலிலுள்ள ஒவ்வொரு உறுப்பும் விபச்சாரக் குற்றத்தைச் செய்யும் போது இன்பத்தை அனுபவித்தது போல இப்போது வேதனையை அனுபவிப்பதற்காகவும் ஆகும். திருமணமாகாதவர் அதாவது முறையாகத் திருமணம் செய்து இல்லறத்தில் ஈடுபடாதவர் விபச்சாரம் செய்தால் அவருக்கு அதிக அளவு கசையடி கொடுக்க வேண்டும். ஷரீஅத்துடைய குற்றவியல் சட்டத்தில் நூறு கசையடிகள் என்று வந்துள்ளது. மட்டுமல்ல குற்றவாளிக்கு அவமானமும் (மற்றவர்களுக்கு படிப்பினையும்) ஏற்படும் வகையில் முஃமின்களின் ஒரு கூட்டத்துக்கு மத்தியில் அத்தண்டனை நிறைவேற்றப்பட வேண்டும். மேலும் முழுமையாக ஒரு வருடத்திற்கு அவரை நாடு கடத்தி இழிவை ஏற்படுத்த வேண்டும்.
விபச்சாரம் செய்தவர்களுக்கு கப்றில் வேதனையாவது, அவர்கள் ஒரு அடுப்பில் நிர்வாணமாகக் கிடப்பார்கள். அதன் மேல்புறம் குறுகலாகவும் கீழ்ப்புறம் விசாலமாகவும் இருக்கும். கீழிருந்து நெருப்பு மூட்டப்படும். அப்போது அவர்கள் ஓலமிடுவர். மேலே வந்து அதனை விட்டும் வெளியேற எத்தனிப்பர். பிறகு நெருப்பு அணைக்கப்படும் போது அவர்கள் உள்ளே திருமிபி விடுவர். இவ்வாறு கியாம நாள் வரை செய்யப்படும்.
வயது கடந்து மண்ணறையைச் சந்திக்கும் நேரம் நெருங்கி விட்ட ஒரு மனிதர் – இது நாள் வரையில் அல்லாஹ் அவருக்கு (திருந்துவதற்கான) அவகாசம் அளித்திருந்தும் – தொடர்ந்து விபச்சாரம் செய்து வந்தால் விவகாரம் இன்னும் மோசமாகும். அபூஹுரைரா (ரலி) அறிவிக்கிறார்கள்: ‘மூவரிடம் அல்லாஹ் மறுமையில் பேச மாட்டான், அவர்களை (பாவங்களிலிருந்து) பரிசுத்தப்படுத்தவும் மாட்டான், அவர்களுக்கு துன்பமிகு வேதனை இருக்கிறது. அவர்கள், வயது கடந்தும் விபச்சாரம் செய்தவர், மகாப் பொய்யனாக உள்ள அரசன், ஆணவம் கொண்ட ஏழை ஆகியோராவர் என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்’ (முஸ்லிம்)
விபச்சாரம் செய்து சம்பாதிப்பது சம்பாத்தியங்களில் தீய சம்பாத்தியமாகும். தனது மானத்தை விற்று சம்பாத்தியம் செய்யும் ஒரு விபச்சாரி – ஹதீஸில் வந்துள்ளது போல – பாதி இரவு கழிந்ததும் வானத்தின் வாயில்கள் திறக்கப்படுகின்ற சமயத்தில் பிரார்த்தனை அங்கீகரிக்கப்படும் பாக்கியத்தை விட்டும் தடுக்கப்பட்டவளாவாள். அல்லாஹ்வின் வரம்புகளை மீறுவதற்கு தேவையும், வறுமையும் பொதுவாக மார்க்கம் அனுமதிக்கின்ற காரணமாக அமையாது. பட்டினி கிடந்தாலும் படி தாண்ட மாட்டாள் பத்தினி என்பது பழமொழி.
தற்காலத்தில் ஆபாசத்தினுடைய அனைத்து வாயில்களும் திறக்கப்பட்டு விட்டன. அதற்கான வழியை ஷைத்தான் தன்னுடைய சூழ்ச்சியாலும் தன் நண்பர்களுடைய சூழ்ச்சியாலும் எளிதாக்கி விட்டான். பாவிகளும், தீயவர்களும் அவனைப் பின்பற்றலானார்கள். அதனால் பெண்கள் தங்கள் அழகு, அலங்காரங்களை வெளிக்காட்டுவது அதிகமாகி விட்டது. ஆபாசங்களும், அந்நியப் பெண்களைப் பார்த்தலும், ஆண்களும் பெண்களும் இரண்டறக் கலந்து விடுதலும் பரவலாகி விட்டன. மஞ்சள் பத்திரிக்கைகளும், நீலப்படங்களும் பரவி விட்டன. தீமைகள் நிறைந்த, கட்டுப்பாடற்ற நாடுகளுக்கு பயணமாவது அதிகரித்து விட்டது. விபச்சார விடுதிகளும், பாலியல் பலாத்காரங்களும், கற்பழிப்புகளும் பெருகி விட்டன. கருக்கலைப்புகளும் தவறான வழியில் பிறந்த குழந்தைகளின் எண்ணிக்கையும் அதிகமாகி விட்டன.