நோன்பின் சிறப்புகள்

நோன்பின் சிறப்புகள்

நோன்பு தொடர்பான 70 விஷயங்கள்’ என்ற நூலிலிருந்து…

மூல நூலாசிரியர்: அஷ்ஷெய்ஹ் முஹம்மது சாலிஹ் அல்-முனஜ்ஜித்

நோன்பின் சிறப்புகள் உண்மையில் மகத்தானவை, மேலும் ஸஹீஹான ஹதீஸ்களில் அறிவிக்கப்பட்டவைகளில் ஒன்று, அல்லாஹ் நோன்பை தனக்காகத் தேர்ந்தெடுத்துள்ளான், அதற்கான கூலியை அளவின்றி வழங்குவான்; அவன் [ஹதீஸ் குத்ஸியில்] கூறுகிறான்:

“நோன்பைத் தவிர, அது எனக்காகவே உள்ளது, அதற்கு நானே கூலி வழங்குவேன்”. (புகாரி, அல்-பத்ஹ், எண். 1904; ஸஹீஹ் அத்தர்கீப், 1/407).

நோன்புக்கு நிகரான எதுவும் இல்லை (நஸாயி, 4/165; ஸஹீஹ் அத்தர்கீப், 1/413),

மேலும், நோன்பாளியின் துஆ மறுக்கப்படாது (பைஹகி, 3/345; அஸ்-ஸில்ஸிலத்துஸ் ஸஹீஹா, 1797).

நோன்பாளிக்கு இரண்டு மகிழ்ச்சியான தருணங்கள் உள்ளன:

  • ஒன்று அவன் நோன்பு திறக்கும் போது,
  • மற்றொன்று அவன் தன் இறைவனைச் சந்தித்து தனது நோன்புக்காக மகிழும் போது (முஸ்லிம், 2/807).

மறுமை நாளில் நோன்பு ஒருவருக்காகப் பரிந்துரை செய்யும், மேலும் அது கூறும்,

“இறைவா, பகல் நேரத்தில் உணவிலிருந்தும் இச்சைகளிலிருந்தும் நான் அவனைத் தடுத்தேன், எனவே அவனுக்காகப் பரிந்துரைக்க என்னை அனுமதிப்பாயாக”. (அஹ்மத், 2/174. அல்-ஹைதமி இதன் இஸ்னாத் ஹஸன் என்று அல்-மஜ்மாவில் கூறியுள்ளார், 3/181. மேலும் காண்க ஸஹீஹ் அத்தர்கீப், 1/411) .

நோன்பாளியின் வாயிலிருந்து வரும் வாசம் அல்லாஹ்விடம் கஸ்தூரியின் நறுமணத்தை விடச் சிறந்ததாகும். (முஸ்லிம், 2/807).

நோன்பு என்பது ஒரு பாதுகாப்பும் நரகத்திலிருந்து ஒருவரைக் காக்கும் உறுதியான கோட்டையுமாகும். (அஹ்மத், 2/402; ஸஹீஹ் அத்தர்கீப், 1/411; ஸஹீஹ் அல்-ஜாமிஉ, 3880) .

எவர் அல்லாஹ்வுக்காக ஒரு நாள் நோன்பு நோற்கிறாரோ, அல்லாஹ் அவரது முகத்தை நரகத்தை விட்டு எழுபது ஆண்டுகள் தொலைவில் அப்புறப்படுத்துவான். (முஸ்லிம், 2/808).

எவர் அல்லாஹ்வின் பொருத்தத்தை நாடி ஒரு நாள் நோன்பு நோற்று, அதுவே அவரது வாழ்வின் கடைசி நாளாக அமைந்தால், அவர் சுவர்க்கத்தில் நுழைவார். (அஹ்மத், 5/391; ஸஹீஹ் அத்தர்கீப், 1/412).

சுவர்க்கத்தில் ‘அர்-ரய்யான்’ என்று அழைக்கப்படும் ஒரு வாசல் உள்ளது, அதன் வழியாக நோன்பாளிகள் நுழைவார்கள், அவர்களைத் தவிர வேறு யாரும் அதன் வழியே நுழைய மாட்டார்கள்;. அவர்கள் நுழைந்தவுடன் அது பூட்டப்படும், வேறு யாரும் அதன் வழியாக நுழைய மாட்டார்கள்.” (புகாரி, பத்ஹ், எண். 1797).

ரமலான் இஸ்லாத்தின் ஒரு தூண்; இம்மாதத்தில்தான் குர்ஆன் அருளப்பட்டது, இதில் ஆயிரம் மாதங்களை விடச் சிறந்த ஓர் இரவு உள்ளது.

“ரமலான் தொடங்கும் போது, சுவர்க்கத்தின் வாசல்கள் திறக்கப்படுகின்றன, நரகத்தின் வாசல்கள் மூடப்படுகின்றன, மற்றும் ஷைத்தான்கள் விலங்கிடப்படுகின்றனர்.” (புகாரி, அல்-பத்ஹ், எண். 3277).

ரமலான் நோன்பு நோற்பது பத்து மாதங்கள் நோன்பு நோற்பதற்குச் சமம் (முஸ்னத் அஹ்மத், 5/280; ஸஹீஹ் அத்தர்கீப், 1/421).

“எவர் ஈமானுடனும் நற்கூலியை எதிர்பார்த்தும் ரமலான் நோன்பு நோற்கிறாரோ, அவரது முந்தைய பாவங்கள் அனைத்தும் மன்னிக்கப்படும்.” (புகாரி, பத்ஹ், எண். 37).

ஒவ்வொரு நோன்பு திறக்கும் நேரத்திலும், அல்லாஹ் நரகத்திலிருந்து விடுதலை செய்ய சிலரைத் தேர்ந்தெடுப்பான் (அஹ்மத், 5/256; ஸஹீஹ் அத்தர்கீப், 1/419).

மற்றவர்களுக்கு அனுப்ப...

நிர்வாகி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

நோன்பின் பலன்கள்

Wed Mar 4 , 2026
நோன்பின் பலன்கள் நோன்பு தொடர்பான 70 விஷயங்கள்’ என்ற நூலிலிருந்து… மூல நூலாசிரியர்: அஷ்ஷெய்ஹ் முஹம்மது சாலிஹ் அல்-முனஜ்ஜித் நோன்பில் அதிக ஞானமும் பல நன்மைகளும் உள்ளன, அவைகள்,